இந்த மண் இன்னுமொரு பாலஸ்தீனமாக மாற்றப்படாது இருக்க வெகுஜன தளத்தில் அணி திரள்வோம் என புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில் நேற்று (15) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 72 வருடங்களில் இந்த நாட்டினுடைய வடகிழக்கில் வாழக்கூடிய தமிழ் பேசும் மக்களுடைய நிலம் அபகரிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு முடிந்து விட்டது இப்போது வடக்கில் கைவைக்க தொடங்கி இருக்கிறார்கள். இன்னுமொரு பாலஸ்தீனமாக இந்த மண் மாறப்போகிறது என்பதனை நாங்கள் அனைவரும் உணர வேண்டும்.
கட்சி வேறுபாட்டிற்கு அப்பால் , தேர்தல் அரசியலுக்கு அப்பால் இந்த மண்ணை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எங்களுக்கு இருக்கிறது. மண் இல்லையென்றால் சுயாட்சியும் இல்லை. சுயநிர்ணயமும் இல்லை. ஒன்றுமே கிடையாது.
ஆகவே எங்களுடைய கருத்து வேறுபாடுகளை கடந்து விவசாயிகளின் பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை , இந்த நாட்டினுடைய 80 வீதமான மக்களுடைய பிரச்சினையை முன்நிறுத்தி வெகுஜன கட்டமைப்புக்களை கட்டி சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சம் தலையில் ஓங்கி அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே இந்த மண் இன்னுமொரு பாலஸ்தீனமாக மாற்றப்படாது இருக்க வெகுஜன தளத்தில் அணி திரள்வோம் என மேலும் தெரிவித்தார்.

