காணி அளவீட்டு பணி நிறுத்தம்

247 0
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள  தனியார் காணிகளை அளவீடு செய்யும் முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள்  பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்தே, குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது

குறித்த காணிகள் , பொலிஸாரின் கட்டுப்பாட்டில்  இருக்கின்றன. இந்த நிலையில், காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், காணி அளவீடு செய்வதற்காக  நில அளவையாளர்கள், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்துக்கு, இன்று வருகை தந்திருந்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் .

அத்துடன், குறித்த காணி தொடர்பில், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருவதாகவும், காணி உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.