‘தென் பகுதி தொல்பொருள்களை பாதுகாக்க காவலரண் அமையுங்கள்’

184 0

தமிழர் பகுதி தொல்பொருள்களை தமிழர்கள் பாதுகாப்பார்கள். முடியுமானால், தென் பகுதி தொல்பொருள்களை பாதுகாக்க இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கொண்டு காவலரண் அமைத்து பாதுகாருங்கள்  என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் (ஈபிஆர்எல்எப்) தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் என்ற போர்வையில் பல இடங்களில் அடையாளப்படுத்தப்பட்டு எல்லைக்கல் இடும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 இடங்களுக்கு மேல் தொல்பொருள் இடங்கள் உள்ளன.

“அந்த இடங்களை எல்லைக்கல் இட்டு, பௌத்த இடங்களாக அவற்றை அடையாளப்படுத்தும் முயற்சிகள் பௌத்த மதகுருக்களால்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

“மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களை பௌத்தர்களுக்குரியது என திணிக்க முற்படும்போது, தமிழ் மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையை உருவாக்கியவர்கள் இந்த பௌத்த குருமார்களாகும்.

“தொல்பொருள் என்பது வரலாற்று ரீதியான பகுதிகள். அவற்றைப்  பாதுகாக்கவேண்டிய கடமை தமிழ் மக்களுக்கும் உள்ளது. தொல்பொருளை பாதுகாக்க வேண்டியவர்கள் அப்பகுதியில் உள்ள மக்கள். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் அதனை பாதுகாத்திருக்கின்றார்கள், பாதுகாப்போம்.

“அதனைவிடுத்து, இராணுவத்தினரைக் கொண்டு பாதுகாப்பு அரண் அமைத்து, தொல்பொருளை பாதுகாப்பது என்றால், அதனை ஏன் சிங்களப் பகுதியில் செய்யவில்லை?

“தென்னிலங்கையில் அவ்வாறான பல பகுதிகள் உள்ளன. முடியுமானால், இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கொண்டு, பாதுகாப்பு அரண்களை அமைத்து, அங்கு அதனை பார்க்க முடியுமா?” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.