சசிகலா விவகாரம் குறித்து பேசக்கூடாது – அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் எச்சரிக்கை

154 0

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை கழகத்தில் பேசி முடிவு எடுத்துக் கொள்வோம் என்று பதில் அளித்தார்.

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழகத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அ.தி.மு.க. தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சசிகலா விவகாரம் குறித்து பேசும் தொண்டர்கள் மீது தலைமைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா ஆகியோர் கூட்டாக தலைமைக் கழகத்தில் பேட்டி அளித்தனர்.

1972-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. இன்று பொன்விழாவை காண்கிறது. 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் முன்னணி தலைவர்கள் ஜானகி அம்மாவுடன் கலந்து பேசி பிளவுபட்ட இயக்கத்தை ஒன்றுபடுத்தினார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வு காணப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டு கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

இந்த இயக்கத்தை இருவரும் சோதனையான காலத்தில் செம்மையாக வழிநடத்தி வருகின்றனர். சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து அதில் தோல்வி அடைந்தாலும் கவுரவமான வெற்றியை அடைந்து இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வெற்றிவாகை சூடினார்கள்.

இந்த சோதனையில் இருந்து மீண்டு அடுத்ததாக மாநகராட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி அடைய வியூகம் வகுத்து பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை கழகத்தில் பேசி முடிவு எடுத்துக் கொள்வோம் என்று பதில் அளித்துள்ளார்.

அதற்கு பல்வேறு வியூகங்களும், அனுமானங்களும் கொடுத்து சிலர் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஊடகங்களில் பேட்டி கொடுக்கிறார்கள். இந்த பிரச்சினையை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடமே விட்டுவிடுவோம். அவர்கள் ஆராய்ந்து பேசி தக்க முடிவு எடுப்பார்கள்.

கழகத்தில் கீழே உள்ளவர்கள் அனைவரும் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை கேட்டு ஒன்றுபட்டு செயல்படுவோம். இதை தவிர்த்து ஆளுக்கு ஆள் பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இப்படி பேசி வருபவர்கள் மீது தலைமைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.