இராணுவ நேர்முகப் பரீட்சைக்கு போலி அறிக்கையை சமர்ப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்க கெபிதிகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேர்காணலுக்கு வந்த நபர், அவரது தந்தை மற்றும் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நேர்காணலுக்காக சந்தேகநபருக்கு பதவிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் அந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், உண்மையான அறிக்கையில் சம்பந்தப்பட்ட நபரின் தந்தை மதுபான வியாபாரம் தொடர்பான 7 வழக்குகளில் குற்றவாளி என கூறப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் சந்தேகநபர் குறித்த அறிக்கையை மாற்றி நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இதன்படி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் கெபிதிகொல்லாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

