வங்காள தேசத்தில் 20 இந்துக்கள் வீடுகளுக்கு தீ வைப்பு

186 0

வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

வங்காளதேச நாட்டில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக உள்ளனர். அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை நடந்தது. அப்போது ஒரு பிரிவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். கோவில் சேதப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகரம் டாக்காவில் இருந்து 255 கி.மீட்டர் தூரத்தில் பிர் காஞ்ச் உபசிலா என்ற கிராமம் உள்ளது. இது மீனவ கிராமம் ஆகும். அங்கு வசிக்கும் அனைவரும் இந்துக்கள் ஆவர். அவர்கள் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக பேஸ்புக் மூலமாக தகவல் பரவியது.

இதையடுத்து பக்கத்து பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 20 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. மேலும் 66 வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்கள்.

ஏராளமானவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. இதையடுத்து கிராம மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓடினார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டார்கள். இந்த கலவரம் தொடர்பாக 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளித்து வங்காள தேசம் செயல்பட வேண்டும். அவர்கள் விழாக்கள் நடத்துவதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதை கண்டிக்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.