சென்னை ஐகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்ட விவகாரம்

283 0

201701100615411817_madras-hc-judge-cs-karnan-to-appear-in-supreme-court-and_secvpfசென்னை ஐகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதி கர்ணன் தானே ஆஜராகி வாதாட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணன், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அதை ஏற்காத நீதிபதி கர்ணன், அந்த மாறுதல் உத்தரவுக்கு அவரே இடைக்கால தடை விதித்தார். அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதி கர்ணனுக்கு எந்த நீதிமன்ற பணியும் ஒதுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது. பின்னர், நீதிபதி கர்ணன், கொல்கத்தா ஐகோர்ட்டில் பணியில் சேர்ந்தார்.இருப்பினும், மாறுதல் உத்தரவை எதிர்த்து அவர் தொடர்ந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில், அவர் சார்பில் வக்கீல் கவுதமன் என்பவர் ஆஜராகி வந்தார்.

இந்நிலையில், தனக்காக, தானே ஆஜராகி வாதாட விரும்புவதாகவும், வக்கீல் கவுதமனை விலகிக்கொள்ள சொல்லி இருப்பதாகவும் கடந்த மாதம் 21-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதி கர்ணன் கடிதம் மூலம் தெரிவித்தார்.

இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கர்ணனின் கடிதத்தை ஏற்று, அவரே வாதாட நீதிபதிகள் அனுமதி அளித்தனர். பணியில் உள்ள நீதிபதிக்கு இத்தகைய அனுமதி கிடைப்பது, இதுவே முதல்முறை ஆகும்.

அதே சமயத்தில், சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தரப்பில், ‘நீதிபதி கர்ணன் வசம் உள்ள 12 கோப்புகளை திருப்பித்தர உத்தரவிட வேண்டும். சென்னையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை அவர் காலி செய்து தர உத்தரவிட வேண்டும்’ என்று கோர்ட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இம்மனு, பிப்ரவரி 13-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.