அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர ஓயாது உழைக்க சபதம் ஏற்போம்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

170 0

அரசியல் வரலாற்றை உற்று நோக்கிப் பார்த்தால், ஏதோ ஒரு கணக்கோடு தான் அரசியல் கட்சிகள் தோன்றுகின்றன.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- துணிவு, தூய்மை, தன்னல மறுப்பு ஆகிய உயர்ந்த பண்புகளின் உறைவிடமான எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கம் பொன்விழா கொண்டாடுகிறது.

அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டவரும், தன்னுடைய திரைப்படங்களின் பாடல்கள் வாயிலாக தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அன்றும், இன்றும் மக்களை ஈர்க்கும் மகத்தான சக்தியாய் அவர் விளங்குகிறார்.

அண்ணா மறைவிற்குப் பின், தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் 17.10.2021 அன்று 49 ஆண்டு கால வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 50-வது பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அரசியல் வரலாற்றை உற்று நோக்கிப் பார்த்தால், ஏதோ ஒரு கணக்கோடு தான் அரசியல் கட்சிகள் தோன்றுகின்றன. ஆனால், கணக்கு கேட்டதற்காக பிறந்த ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கம். அதனால் தான், தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதங்களில் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலைச் சந்தித்து வெற்றி வாகை சூடி வரலாற்று அதிசயத்தை படைத்தது.

இதன் தொடர்ச்சியாக, 1977-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி மலர்ந்தது. புரட்சித் தலைவரின் ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்ற தி.மு.க.-வின் சதித் திட்டம் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை செல்லுபடியாகாமல் இருந்தது.

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, கழகத்தின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை, சின்னம் முடக்கப்பட்டது. கழகம் பிளவுப்பட்டதன் காரணமாக தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், சேவல் சின்னத்தில் தனியாக களம் கண்டு, தனக்குள்ள மக்கள் செல்வாக்கை ஜெயலலிதா நிரூபித்து எதிர்க்கட்சி தலைவரானார்.

இதன் மூலம் தமிழ் நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமை அவர்களை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பிளவுபட்டக் கழகம் மீண்டும் ஒன்றிணைந்தது, முடக்கப்பட்ட ‘இரட்டை இலை’ சின்னம் மீட்கப்பட்டது.

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று ஜெயலலிதா தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியது. மகளிருக்கு என்று தனிக் காவல் நிலையங்களை உருவாக்கியது. உலகத் தமிழ் மாநாட்டினை நடத்திக் காட்டியது உலகத் தரம் வாய்ந்த நேரு விளையாட்டு அரங்கத்தை கட்டியது, காவல் துறையை நவீன மயமாக்கியது என பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன.

1996-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக சோதனைகள் ஏற்பட்டாலும், நெருப்பாற்றிலே நீந்தி, சவால்களை எதிர்கொண்டு, தடைக்கற்களை தகர்த்தெறிந்து, 2001-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் கழகத்தை அமோக வெற்றி பெறச் செய்து, இரண்டாவது முறையாக தமிழ் நாட்டின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார்.

2001 முதல் 2006 வரையிலான காலக் கட்டத்தில், பயிர்க் கடனுக்காக வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி, அன்னதானத் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம், புதிய வீராணம் திட்டம், திருட்டு வி.சி.டி. ஒழிப்புத் திட்டம், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம், தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை ஜெயலலிதா தமிழ் நாட்டு மக்களுக்கு அளித்தார்.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, உலக நாடுகளே போற்றும் வண்ணம், வறட்சியையும், சுனாமியையும், பெரு வெள்ளத்தையும் எதிர்கொண்டு, மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட பெருமை அவர்களையே சாரும்.

2011-2016-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித் திட்டம், சட்டப் போராட்டத்தின் மூலம் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியது என எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி தமிழ் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றவர் ஜெயலலிதா.

இதன் காரணமாக, 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ் நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. முதன் முறையாக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்ற பெருமையை பெற்றது. இந்த தொடர் வெற்றிக்குக் காரணம் ஜெயலலிதாவின் தீர்க்கமான முடிவு, ஓயாத உழைப்பு, துணிச்சலான செயல்பாடு ஆகியவைதான்.

ஜெயலலிதா மறைவினையடுத்து, அவரின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு மீண்டும் துவக்கம், எய்ம்ஸ் மருத்துவமனை, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, 15,000 கோடி ரூபாய் செலவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு, பயிர்கடன் தள்ளுபடி, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தருணத்தில் 2021-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. 3-வது முறையாக மீண்டும் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிரணியினர் அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகள் காரணமாக ஆட்சி நம்மைவிட்டு கைநழுவிப் போய்விட்டது.

அ.தி.மு.க. தோன்றி 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது பொன்விழா ஆண்டு தொடங்கும். இப்பொன்னாளில், நல்ல உள்ளமும, சிந்தனையும், தூய நெஞ்சமும், துயர்படுத்த முடியாத மனமும் கொண்ட ஜெயலலிதா வழிகாட்டுதலோடு, அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலர ஓயாது உழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.