நமது நாட்டிலேயே குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கிராம்பு மொட்டுகளிலுள்ள வாசனை எண்ணெயின் சதவீதம் அதிகபட்சமாக காணப்படுகிறது
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் வீரப்புலி இருப்பு காட்டு பகுதிகளான மாறாமலை, கரும்பாறை மற்றும் வேளிமலை பகுதிகளிலும், மகேந்திரகிரி பகுதியிலும் சுமார் 760 எக்டேர் பரப்பில் கிராம்பு பயிரிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும். நாட்டின் கிராம்பு மொத்த உற்பத்தி 1,100 டன் ஆகும். இதில் 1,000 டன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை மற்றும் 800 மீட்டர் உயரத்தில் உள்ள தோட்டங்களில் உலர வைத்தல் ஆகியவற்றால் வாசனை திரவியங்கள் குறைந்த அளவே ஆவியாகி அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது. கிராம்பு மரத்தின் பூமொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. கிராம்பு பொருட்கள் மற்றும் மொட்டுகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் வாசனை எண்ணெய்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

