மஹிந்த குடும்பத்தை சிறைக்கு அனுப்பவேண்டும்

249 0

rajitha1-720x480-720x480கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்து பாரிய கடன் சுமையை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதே மக்களின் அவா என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – சீனா முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்புவிழாவின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்களை மஹிந்தவின் ஆதரவாளர்கள் எதிர்க்கின்றார்களே தவிர மக்கள் எதிர்க்கவில்லை. மஹிந்த அரசில் அம்பாந்தோட்டை உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களின் இடங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யாமல் 99 வருட கால குத்தகையின் அடிப்படையிலேயே வழங்கியுள்ளோம்.

இன்று போராட்டம் செய்பவர்கள், அன்று மஹிந்த அரசு நாட்டின் இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தபோது எங்கிருந்தனர்? நாட்டின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கையை கருத்திற்கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியன அமைக்கப்பட்டபோது 5,000 கோடியை மஹிந்த தரப்பினர் கொள்ளையடித்திருந்தனர். நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் பல நாசகார வேலைகளை செய்து நாட்டை கடன்சுமையில் தள்ளிவிட்டனர்.இந்நிலையில், நாட்டின் எதிர்காலம் கருதியும் கடன் சுமைகளில் இருந்து விடுபட்டு அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் நோக்குடனேயே இத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.