தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவுவிழா – நெற்றெற்றால்-28.8.2021

2955 0

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முத்தகவை (30) நிறைவு விழா கொரேனா பெருந்தொற்றுக் கரணியமாக ஏற்பட்ட இடையூறின் விளைவாகக் கடந்த ஆண்டிலே நிறைவுறாத மத்திய மாநிலத்துக்கான விழா 28.08.2021அன்று காலை 09:00 – 14:30 வரை பகுதி ஒன்று மற்றும் 15:00 – 21:00 மணிவரை பகுதி இரண்டாகத் திட்டமிடப்பட்டு நெற்றெற்றால் அரங்கிலே 9:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களோடு நெற்றெற்றால் நகரமுதல்வர் திரு கிறிஸ்ரியன் குய்ஸ்ற்ரெஸ் Christian Küsters அவர்களும், பொன் – லுய்ற்றெல்ப்றாக்ற் கத்தோலிக்கத் தொடக்கநிலைப் பள்ளியின் அதிபர் திருமதி கிளவ்டியா நொய்ல்கெஸ் Claudia Nölkes அவர்களும் வருகைதந்ததோடு, அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்விலே அதிதிறனுக்கான புள்ளிகளைப் பெற்று யேர்மன் தழுவிய மட்டத்தில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பையும் வழங்கியதோடு, சிறப்புரையாற்றிச் சிறப்பித்தனர்.

5,10,15ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோருக்குப் பட்டயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு, 20ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோர் தமிழ்வாரிதி, என்ற பட்டமளிப்பையும், 25ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோர் தமிழ்மாணி, என்ற பட்டமளிப்பையும் பெற, முத்தகவை நிறைவு விழாவின் முத்தாரமாய் 30ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்காக மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட சிறப்புப் பதக்கம் அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. மதிப்பளிப்புகளைத் தமது தமிழாலய உறவுகள் புடைசூழ அரங்கேறிப் பெற்றமை, அறப்பணிக்குக் கிடைத்த அதியுச்ச அங்கீகாரமாகக் காட்சியளித்தது.

வெற்றியின் படிக்கற்காளாய் இருக்கும் ஆசான்களின் மதிப்பளிப்புகளோடு, கல்வி, கலையெனத் தமது திறன்களால் வெற்றிவாகை சூடியோருக்கான மதிப்பளிப்புகளோடு, சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன.

தமிழாலயத்திலே இணைந்தது முதல் 12ஆம் ஆண்டுவரை தமிழ்மொழி கற்று நிறைவுசெய்தோருக்கு சிறப்பாக அதற்கென உருவாக்கப்பட்ட உடை அணிவிக்கப்பட்டு அரங்கிற்கு அழைத்துவரப்பட்டுச் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர். விடுதலை நடனங்கள் மற்றும் பாடல்கள் அரங்கை அப்பப்போ சிறப்பித்து நகர்ந்து செல்ல, நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற தமிழினத்தின் இலட்சியத் தாகம்மிகு பாடலுடன் எழுச்சி பொங்க நிறைவுற்றது.