2017–ம் ஆண்டு பிறந்தது: புத்தாண்டையொட்டி கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு ஏற்பாடு

328 0

201701010903107881_2017-new-year-celebration_secvpf2017–ம் ஆண்டு பிறந்ததை தொடர்ந்து கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தோ‌ஷங்களையும், சோகங்களையும் சுமந்து வந்த 2016–ம் ஆண்டு நிறைவுபெற்று 2017–ம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டையொட்டி நேற்று நள்ளிரவு  முதல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியது. பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு புத்தாண்டை இனிதாக வரவேற்றனர். செல்போன்கள் மூலம் வாழ்த்துக்களை தங்களுடைய நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.

புத்தாண்டின் முக்கிய அம்சமாக, கோவில்களிலும், ஆலயங்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அதிகாலை 3 மணி முதலே பல கோவில்களில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது.

பார்த்தசாரதி கோவிலில் புத்தாண்டையொட்டி சிறுவர்–சிறுமியர் பங்கேற்கும் கோலாட்டம், பஜனை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில், அடையாறில் உள்ள அய்யப்பன் கோவில், மயிலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோவில், சென்னை மேற்கு சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்திலும் நேற்று இரவு முதல் 2016–ம் ஆண்டிற்கான நன்றி அறிவிப்பு பிரார்த்தனையும், சரியாக 12.01 மணிக்கு புத்தாண்டு பிரார்த்தனையும் நடந்தது. கடந்த ஆண்டுக்காக நன்றி தெரிவித்தும், புத்தாண்டில் பல ஆசிகள் வழங்க வேண்டியும் பாதிரியார்கள் பிரார்த்தனை செய்தனர். குறிப்பாக பெசன்ட்நகர் வேளாங்கண்ணி கத்தோலிக்க திருத்தலத்தில் பங்கு தந்தை பி.கே.பிரான்சிஸ் சேவியர், பாதிரியார்கள் ஜூடு ராஜேஷ், அமல்ராஜ், பேட்ரிக் பால், ஆல்பர்ட் ஜூடு ஆகியோர் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.

நெசப்பாக்கம் புனித அன்னம்மாள் கத்தோலிக்க தேவாலயத்தில் லாரன்ஸ்ராஜ் அடிகளார் தலைமையிலும், வில்லிவாக்கம் சீனிவாச நகரில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையிலும் ஆராதனை நடந்தது. அடையாறு இயேசு அன்பர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் பாதிரியார் எர்னஸ்ட் செல்லத்துரை தலைமையில் ஆராதனை நடைபெற்றது. ஊரப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில் நேற்று இரவு 10 மணிக்கு பழைய ஆராதனையும், 12 மணிக்கு புது வருட ஆராதனையும் நடந்தது. ஆராதனையை போதகர் விஜயகுமார் நடத்திவைத்தார். இன்று பகலிலும் பல விசே‌ஷ பிரார்த்தனைகள் நடக்கிறது.

நுங்கம்பாக்கம் கதீட்ரல் சி.எஸ்.ஐ. தேவாலயம், சாந்தோம் தேவாலயம் மற்றும் பல்வேறு தேவாலயங்களில் இரவில் புதுவருட ஆராதனை நடந்தது.