காணிகளை விடுவிக்காமை நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றது

390 0

viyalenthiran-tns-390-seithy-720x480யுத்தம் நிறைவடைந்த பின்னரும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்காமல் இருப்பது, நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் குடியிருப்புக் காணிகள் மற்றும் வாழ்வாதாரத் தேவைக்கான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாதிருப்பது பற்றிய விபரங்களை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:-
”யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இந்த இந்த 2017ஆம் ஆண்டிலாவது தீர்க்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களும் நாமும் எதிர்பார்க்கின்றோம்.

யுத்தம் முடிந்து 7 ஆண்டுகளாகிவிட்ட போதும் மக்கள் நலத் திட்டங்களினூடாக மக்களின் வாழ்வாதார தேவைகளைக்கூட நிறைவு செய்துகொடுக்க முடியாதளவுக்கு காணிகள் விடுவிக்கப்படாமை போன்ற தடைகள் இருப்பது கவலைக்குரிய விடயம்.

இந்த நல்லாட்சியிலே மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரக் காணிகளும் மக்கள் நலனோம்புத் திட்டங்களை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், கிழக்கிலே இந்து மக்களின் பிரபலமான ஸ்ரீகாமாக்ஷி வழிபாட்டிடத்திற்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவல் அரண் விடுவிக்கப்படாததால் கணவன்மாரை இழந்தோரின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை வழங்க முடியாதுள்ளது.

வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்ற 72 விதவைக் குடும்பங்களுக்கு வீடுகளும், 500 இற்கு மேற்பட்ட வசதி குறைந்த சிறுவர்களுக்கு கல்விக்கான வசதிகளையும் சுவாமி ராமதாஸ் நிறுவனத்தின் கருணாலய நிருவாகம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கின்றார்கள்.

ஆனால், தற்போது பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதார தொழில்களை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளைச் செய்வதற்கு பெரும் தடையாகவுள்ளது. ஆகவே இந்த பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டிருக்கும் காணி விடுவிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலே, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலே பேசப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மற்ற பொறுப்புவாய்ந்த அனைத்து அதிகாரிகளும் காணிகள் 3 மாதங்களில் விடுவிக்கப்படும் என வாக்குறுதியளித்தார்கள்.

ஆனால், அது இன்றளவும் அமுல்படுத்தப்படாததால் மக்கள் தமது உரிமையைக் கேட்டு தெருவுக்கு வந்திருக்கிறார்கள். எனவே, இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே இன்னும் பொலிஸ் மற்றும் படையினர் வசமுள்ள பொது மக்களின் குடியிருப்புக் காணிகள், வாழ்வாதாரக் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.