வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு பாதயாத்திரை வருவதை தவிர்க்க வேண்டும்: பக்தர்களுக்கு நாகை ஆட்சியர் வேண்டுகோள்

241 0

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதை தவிர்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில், பேராலய திருமண மண்டபத்தில், கரோனா தொற்று தொடர்பாக வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக வேளாங்கண்ணி இருப்பதால், இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் 3-வது அலை பரவாத வகையில் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும்.

வேளாங்கண்ணிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதை தவிர்த்து, கரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வேளாங்கண்ணியில் பொதுமக்கள், வணிகர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார்.

பின்னர், ஆட்சியர் தலைமையில் அனைவரும் கரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கூட்டத்தில், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள், தங்கும் விடுதி, உணவக உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, வேளாங்கண்ணி பேரூராட்சியில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சந்தை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்கா, கோயில்கள், தேவாலயங்கள் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளித்து, கரோனா வைரஸ் பரவாத வகையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.