தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதாரத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி கிழக்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கரோனா வைரஸ் போன்ற வேடமணிந்த நபர் சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை துரத்தி பிடித்து முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாநகராட்சி ஆணையர் தி.சாரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் தி.சாரு பேசினார். நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், மகளிர் வள மையம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி அம்பேத்கர் நகர் மற்றும் பெரியார் சிலை அருகே நடைபெற்றது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். கரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே.கென்னடி சுத்தமாக கைகளை கழுவுவது பற்றி விளக்கம் அளித் தார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்கபிரதிநிதிகள் மற்றும் வங்கி அலுவலர்களுக்கான கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பொது சுகாதாரத்துறை மருத்துவர் மனோஜ் தடுப்பூசியின் அவசியம் குறித்து விளக்கினார்.
கயத்தாறு ஆர்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் ஆன்லைன் மூலம் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டாட்சியர் பேச்சிமுத்து தொடங்கி வைத்தார்.
கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

