அரசாங்கத்திற்கு எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்றால் சம்பளத்தை வழங்குக!

164 0

அரசாங்கத்திற்கு எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்று அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் மேலும் தாமதித்துக் கொண்டிருக்காது அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மாயாஜாலத்தினூடாகவும் , போலியான ஊடக பிரசாரங்கள் ஊடாகவும் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி காணப்படுவதாக நாம் கூறிய போது , அமைச்சரொருவர் அவ்வாறு அரசாங்கத்திற்கு எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை. வேண்டிளவிற்கு அரசாங்கத்திடம் நிதி காணப்படுவதாகக் கூறினார்.

அவ்வாறெனில் மேலும் தாமதித்துக் கொண்டிருக்காது அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்துகின்றோம். அதிபர் ஆசியர்களின் சம்பள முரண்பாடு மாத்திரமின்றி உரப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தற்போது நாட்டில் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் எந்த பிரச்சினை குறித்தும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆனால் அமைச்சர்கள் நீண்ட காலமாக நித்திரையிலிருந்து திடீரென எழுந்ததைப் போன்று சில விடயங்களைக் கூறுகின்றனர் என்றார்