யாழ். பல்கலை விரிவுரையாளர் கண்ணதாசன் நேற்று விடுதலை

208 0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டுனான வழக்கிலிருந்து யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆட்களைக் கடத்தினாரென்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நடைபெற்று வந்ததையடுத்து 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை இரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்தது.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இ. கண்ணன் முன்னிலையில் நேற்று (30) எடுக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த வழக்கில் மேலதிக சாட்சிகள் இன்மையால் வழக்கை நிறுத்திக்கொள்வதாக அரச சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விரிவுரையாளர் கண்ணதாசன் அத்தனை குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.