தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உயிரிழந்த எலியை வாயில் வைத்துக் கொண்டு அங்கப்பிரதட்சணம் செய்து, தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பல்வேறு விவசாய சங்கத்தினர் ஆட்சியரகத்துக்கு வந்தனர்.
கூட்டத்துக்கு வந்த தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சட்டை அணியாமல் உயிரிழந்த எலி மற்றும் மண் சட்டியுடன் வந்தனர். கூட்ட அரங்குக்கு வெளியே நுழைவு வாயில் பகுதியில் படுத்து விவசாயிகள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். தொடர்ந்து உயிரிழந்த எலியை வாயில் வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியது:தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், பருவமழை காலங்களில் மழைநீரைச் சேமிக்க ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதையடுத்தே இந்த போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர் என்றார்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.

