அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்பு

367 0

sasiஅதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா சனிக்கிழமை (டிச.31) பொறுப்பேற்கிறார். இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் வியாழக்கிழமை (டிச.29) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவிடம் நேரில் அளிக்கப்பட்டது. நிர்வாகிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவியை ஏற்க அவர் ஒப்புதல் தெரிவித்தார்.

இன்று பொறுப்பேற்பு: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா சனிக்கிழமை (டிச. 31) பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதற்கான நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது. இதற்காக, கட்சி நிர்வாகிகள் அனைவரும் காலை 11.30 மணிக்கு முன்னதாகவே தலைமை அலுவலகத்துக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின், அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அவர் மாலை அணிவித்து, கட்சிக் கொடியையும் ஏற்றி வைக்கிறார்.பேச்சைக் கேட்க ஆர்வம்: பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருக்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெரும்பாலான அரசியல் மேடைகளில் சசிகலா உடனிருந்துள்ளார். ஆனால் அவர் எந்தவொரு மேடையிலும் இதுவரை பேசியதில்லை.
இந்த நிலையில், அவரது பேச்சையும், குரலையும் கேட்க கட்சியினர் மட்டுமின்றி பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்கவுள்ள சூழலில், அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் வழியில் பேனர்களும், வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அதிகளவு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பதவியேற்கவுள்ள நிகழ்வு மிகவும் எளிமையான முறையிலேயே நடைபெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்தல் ஆணையத்துக்கு தகவல்: புதிய பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு, அது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய குறிப்பேடுகளில் கட்சியின் பொதுச் செயலாளரின் பெயர் ஜெயலலிதாவுக்குப் பதிலாக சசிகலா எனக் குறிப்பிடப்படும்.