கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை முதல் தடுப்பூசி – வைத்தியர் நிமால் அருமைநாதன்

164 0

கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தவறாது தங்களுக்குரிய தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

கல்வித்துறை ஊழியர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் முச்சக்கரவண்டி சாரதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள முடியும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது தடுப்பூசி நிலையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி, உருத்திரபுரம் வைத்தியசாலை, தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேரவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய நிலையங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளவும்.

மேலும் மாற்றுவலுவுள்ளோர், கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், படுக்கை நோயாளிகள், முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு எமது நடமாடும் சேவை பிரிவினர் அவர்களின் இருப்பிடம் சென்று தடுப்பூசி வழங்குவார்கள்.

எனவே இந்த தேவையுள்ளவர்கள் 021 2285933 தொடர்பு கொண்டு முற்பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்தோடு இச் சேவையினை தவறாக பயன்படுத்தாது தேவையுள்ளவர்கள் மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் தொடர்ச்சியாக ஒரு சில நாட்கள் வரை இடம்பெறவுள்ளது. எனவே மக்கள் அனைவரும் தங்களுக்குரிய தடுப்பூசியினை பெற்றுக் கொண்டு கோவிட் – 19 வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு, இலங்கையிலும், எமது மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இவ்வாய்ப்பினை பொது மக்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிளிநொச்சியில் உள்ள 12 வாரங்களுக்கு அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் இந்த நிலையங்களுக்கு சென்று தங்களுக்குரிய தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். இவர்களுக்கு என பிரத்தியோகமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.