ரிஷாட் வீட்டில் செயலிழந்த சிசிடீவி கெமரா!

163 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது, சிறுமியின் பெயரை ‘ஹிஷானி” என்ற சிங்கள பெயரை வழங்கியுள்ளதுடன், அவரது வயதாக 18 வயதை கூறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

உயிரிழந்த சிறுமி தங்கியிருந்த கூடாரம் போன்ற இடத்தில் காணப்பட்ட கட்டிலின் மீது மண்ணெண்ணெய் அடங்கிய போத்தல் மற்றும் தலையணைக்கு கீழ் லயிட்டர் ஆகியன காணப்பட்டதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டிற்கான எந்தவித தேவையும் கிடையாது என, குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணிப் பெண்களாக வேலை செய்ய யுவதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

தமது வீட்டில் பணியாற்றும் சாரதியினால் இந்த மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டதாக ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ள போதிலும், சாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தாம் அவ்வாறு மண்ணெண்ணெய் கொண்டு வரவில்லை என கூறியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நூலொன்றை பற்ற வைக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே சிறுமி மீது தீப்பற்றியதாக ரிஷாட் பதியூதீனின் மனைவி ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிவித்திருந்த நிலையில், அவர் பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, சிறுமி கூச்சலிட்ட சத்தத்தை கேட்டே தான் அதனை அவதானித்ததாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் சந்தேகநபர், பரஸ்பர வாக்குமூலங்களை வழங்கியுள்ளமை சந்தேகத்தை மேலும் அதிகரிக்கின்றது என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, குறித்த சிறுமியின் பெற்றோர், கடந்த 8 மாதங்களில் சிறுமியை பார்வையிட மூன்று சந்தர்ப்பங்களில் வருகைத் தந்த போதிலும், வீட்டின் உரிமையாளர்கள் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்பதும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி உயிரிழந்ததன் பின்னர், பொலிஸ் ஆடையை ஒத்ததான ஆடையை அணிந்த நபர் ஒருவர், உயிரிழந்த சிறுமியின் சகோதரனை சந்தித்து, ”இந்த விடயத்தை நீண்ட தூரம் கொண்டு வேண்டிய அவசியம் இல்லை. பொலிஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை” என அழுத்தங்களை விடுத்துள்ளதுடன் 50,000 ரூபா பணத்தையும் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதன்பின்னர், இறுதிக் கிரியைகளுக்காக மேலும் 50,000 ரூபா பணத்தை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இதன்படி, இந்த சம்பவத்தை மறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, இந்த சம்பவத்தின் ஊடாக தெளிவாகின்றது என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

இந்த சிறுமிக்கான 30,000 ரூபா சம்பளத்தை அவருக்கு நேரடியாக வழங்காது, சந்தேகநபரான இடைதரகரின் வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டு, அதிலிருந்து 10,000 ரூபாவை தரகர் குறைத்துக்கொண்டு, எஞ்சிய 20,000 ரூபாவை பெற்றோருக்கு வழங்கியுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

குறித்த வீட்டில் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த மேலும் 9 சிறுமிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குறித்த வீட்டில் பணிப்புரிந்த இரண்டு சிறுமிகள், நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான சியாப்தீன் இஸ்மத்தினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு சிறுமி குறித்த நபரினால் இரு தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் 8 சீ.சீ.டி.வி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அதிகாலை 6.30 முதல் பொருத்தப்பட்டிருந்த கமராக்களில் 6 கெமராக்கள் செயலிழந்துள்ளமையும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த சிறுமி எதிர்நோக்கிய துன்புறுத்தல்களுக்கு வீட்டுத் தலைவனான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நேரடியாக பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல், அவரையும் இந்த வழக்கில் சந்தேகநபராக எதிர்காலத்தில் பெயரிட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பிணையில் விடுவித்தால், விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதுடன், மக்கள் மத்தியிலும் அமைதியின்மை ஏற்படக்கூடும் என்பதனால், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் நீதவானிடம் கோரியுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு போதுமான சாட்சியங்கள் கிடையாது என பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க முடியாது என அவர்கள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.