தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 149 பேர் கைது!

202 0

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,000 ஐ தாண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 46,000 சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும்,  6,000 பேர் மீது வழக்குத் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை தனிமைப்படுத்தல் விதிகளும், பயணக்கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அமுலில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் முகக்கவசத்தை சரியாக அணியாத நபர்களை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.