சிறுமியின் மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும் – தமிழ் தேசியக் கட்சி

170 0

மலையகப் பிள்ளைகள் பல்வேறு கொடுமையான சூழ்நிலைக்கு உள்ளாவதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த (16 வயது) சிறுமியின் மரணம் தொடர்பில் தமிழ் தேசியக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மலையகத்தைச் சேர்ந்த சிறுமியின் சோக மரணம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, மனிதாபிமான உணர்வு கொண்ட அனைவரின் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சூழ்நிலையின் உணர்வலைகள் காலப் போக்கில் ஓய்ந்து போய்விட அனுமதிக்காமல், அவற்றிற்கு உத்வேகம் கொடுக்க அனைவரின் கரங்களும் இணைய வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

சுதந்திர இலங்கையின் முதல் வருடத்திலேயே, குடி உரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக மாற்றப்பட்ட மலையகத் தமிழர் சமூகம், அதன் பின் 15 வருடங்கள் கழித்து இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக, மந்தைகள் போல பிரித்து பங்கீடு செய்யப்பட்ட வரலாற்றுத் துரோகத்தின் பின்னணியில் அதன் ஒரு பகுதியினருக்கு வழங்கப்பட்ட குடியுரிமை மற்றும் வாக்குரிமையோடு சமீபகாலமக எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது.

ஆயினும், மலையகத் தமிழர் மத்தியில் தொடர்ந்து நிலவும் கடுமையான தொழிற் தட்டுப்பாடு, போதிய ஊதியமின்மை உட்பட்ட பொருளாதார பிரச்சினையே இந்தக் கோர மரணம் நிகழ்ந்த சூழ்நிலையின் அடிப்படைக் காரணமாக உள்ளது. கல்வி கற்க வேண்டிய வயதில் கொழும்பு உட்பட தொலைதூர இடங்களில் தனியார் வீடுகளிலும், உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்கள் போன்றவற்றிலும் பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படும் மலையகப் பிள்ளைகள் பல்வேறு அவலங்களுக்கு ஆளாகும் கொடுமையான சூழ்நிலைக்கு முடிவு கட்டப்படுவதன் மூலம், இந்த சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக நாம் அனைவரும் மாற்றி அமைக்க முன்வர வேண்டும்.

இந்த மரணம் தொடர்பான புலன் விசாரணைகளை தொடர்ந்து ஊன்றி அவதானித்து, அவை உரிய முறையில் விரைந்து முன்னெடுக்கப்படுவதன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்துவது எவ்வளவு அவசியமானதோ, அதே போல, வெளிச்சத்துக்கு வராமல் மூடி மறைக்கப்பட்ட இத்தகைய பல குற்றங்களுக்கு அடித்தளம் அமைத்திருக்கும் சமூக பொருளாதார சூழ்நிலையை முற்றுமுழுதாக மாற்றி அமைப்பதில் அக்கறையுள்ள அனைவரும் ஆர்வத்தோடு இணைந்து செயற்படுவது இன்றைய கட்டாயத் தேவையாக உள்ளது.

சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து மலையக தமிழ் சமூகத்தின் கல்வியாளர்கள் தொழில் அதிபர்கள உட்பட சமூக நலன் விரும்பிகள் சிலர் ஒன்றாக சந்தித்து சிந்தித்திருப்பது, உற்சாகப்படுத்தப்பட வேண்டிய நல்லதோர் ஆரம்பமாகும். இந்த முயற்சிக்கு வட கிழக்கைச் சேர்ந்த ஒத்த நோக்குடையோரும் அனுசரணை வழங்க முடியும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.