வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படங்களால் நாட்டுக்கு வருமானம்-கெஹலிய

243 0

வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டமையால் இந்த வருடம் பெப்ரவரி முதல் 251 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் அண்மையில் நடைபெற்ற வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கொவிட் சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு நாடகங்கள், திரைப்படங்களை உள்நாட்டு ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு வரி அறவீடு பெப்பரவரி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அறவீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனூடாக உள்நாட்டுக் கலைஞர்களைப் பலப்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

கொவிட் காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நிகழ்ச்சிகளை 16 மணித்தியாலங்களுக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்காக செலவிடப்படும் தொகை 22 மில்லியனாக இருக்கிறபோதிலும், வெறும் 4 மில்லியன் ரூபாயே கிடைத்துள்ளது. மாணவர்களின் முன்னேற்றத்துக்காக அரச தொலைக்காட்சி சேவைகள் தமது பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.