நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்றதன் பின்னர், முதலாவது வேலையாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி, இச்சட்டமூலத்தால் நாட்டு மக்களுக்கு எந்தவிதமானப் பயனும் இல்லை என்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்கம் புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. சட்டரீதியாக இதுவரையில் வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள், வருமானம் தொடர்பில் சுயமாக முன்வந்து தகவல்களை தருவோருக்கு தண்டனை கிடையாதெனவும், அவ்வாறு அறிவிப்பவர்களுக்கு நிவாரணங்களையும் வழங்குவதற்காக இச்சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளனர் என்றார்.
இச்சட்டமூலத்தால் நாட்டு மக்களுக்கு எந்தவிதமானப் பயனும் இல்லை. மாறாக சட்டத்துக்கு புறம்பாக சொத்துக்களை வைத்திருக்கும், நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்யும் திருடர்களுக்கு உதவும் வகையில் இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டமூலமே இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது நெருங்கியவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறது. திருடர்களுக்கு நிவாரணங்களை வழங்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர், பாரிய நிவாரணங்களை நாட்டு மக்களுக்கு அவர் வழங்குவாரென இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா உள்ளிட்டோர் கூறினார்கள் என்றார்.
எனினும் பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டப் பின்னர் முதலாவது சட்டமூலமாக கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

