சிறுமிக்கு நீதி கோரி பறை மேளம் அடித்து வீதியில் போராட்டம்!

170 0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தியும் சம்பவத்துக்குக்குக் கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் இன்று (21) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இவர்கள், பறை மேளம் அடித்து, சிறுமிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று பல்வேறு கோஷங்களைக் கொண்ட பதாகைகளையும் ஏந்தியவாறு, மட்டக்களப்பு, தாண்டவன்வெளி சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“வீட்டு வேலைத் தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும்”, “சிறுமிக்கு நீதி வேண்டும்”, “வீட்டு வேலையும் தொழில்தான்; சட்டம் வேண்டும்”, “நான் வேலைக்காரி இல்லை, தொழிலாளி” போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.ஓர் அமைச்சராக இருந்தவர், பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர், சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு அமர்த்தியமை சட்ட மீறல் எனவும் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.