கவிஞர் அஹ்னப் ஜஸீமை விடுதலை செய்வதற்கான கூட்டத்திற்கு கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு குவிகின்றது

287 0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்ட்டுள்ள இளம் கவிஞர் அஹ்னப் ஜஸீமை விடுதலை செய் என்ற தலைப்பின் கீழ், கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு ஜூலை 18 இரவு ஏழுமனிக்கு நடத்த தீர்மாணித்துள்ள இணையவழி கூட்டத்திற்கு கலைஞர்கள் புத்திஜீவிகள மற்றும் தொழிலாளர்களினதும் உத்வேகமான ஆதரவு கிடைத்து வருகின்றது.

அஹ்னப் ஜஸீம்

இருபத்தாறு வயதான கவிஞர் ஜஸீம் ஒரு வருடத்திற்கும் மேலாக கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர் மீது முறையான குற்றச்சாட்டுகளை கூட பதிவு செய்ய பொலிசார் தவறிவிட்டனர். “மாணவர்களுக்கு இனவாதத்தையும் அதிதீவிரவாதத்தை கற்பித்தல் மற்றும் அது குறித்த புத்தகங்களை வெளியிட்டமை” சம்பந்தமாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. புலனாய்வுத் துறையின் விசாரணையானது கவிஞரால் எழுதப்பட்ட நவரசம் என்ற தலைப்பில், 2017 இல் வெளியிட்ட கவிதை தொகுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இதை எந்த நீதிமன்றமும் தடை செய்யவில்லை.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி விரைவாக முன் செல்கின்ற நிலையில், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை நசுக்குகிறது. அதற்குச் சமாந்தரமாக, தனது தாக்குதல்களுக்கு எதிராக வளரும் வர்க்கப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு, தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிரித்து, முஸ்லீம்-விரோத மற்றும் தமிழ்-விரோத வலதுசாரி ஆத்திரமூட்டல்களை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த இரட்டை தாக்குதலின் ஒரு பகுதியே ஜஸீம் மீதான வேட்டையாடல் ஆகும்.

அவரை விடுதலை செய்வதற்காக, கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளம் முன்னெடுத்து, நடத்தி வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நடத்தப்படும் இந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழிலாளர்கள் பின்வரும் அறிக்கைகளை வெளியிட்டனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், அதுலா சமரகோன்:

பேராதனை பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர், அதுலா சமரகோன்

‘கவிஞர் அஹ்னப் ஜஸீமை கைது செய்து அவரது கருத்து சுதந்திரத்தை மீறியதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இதை ஒரு நீண்டகால செயல்முறையின் உச்சமாக நான் பார்க்கிறேன்.

“இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் என்று கூறிக்கொள்கின்ற கட்சிகள் உட்பட நாட்டை ஆட்சிசெய்த கட்சிகள் இனவெறியை விதைத்து வந்துள்ளன. அந்த பயணம் சமீபத்தில் மிகவும் வலுவான முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமாக மாறியுள்ளது. கவிஞர் அஹ்னப் ஜஸீமின் சிறைவாசம் அதில் ஒரு கட்டமாகும்.

‘தீவிரமான கற்பனையான செய்திகளின் அடிப்படையில் அரசாங்கம் இந்த முஸ்லீம்-விரோத உணர்வைத் தூண்டுகிறது. அஹ்னப் மீதான வேட்டையாடல், இதேபோன்ற புனைகதைகளைப் பயன்படுத்தி, முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டல்களை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் ஒரு முயற்சி ஆகும்.

‘இடது கட்சிகள் என்று கூறிக்கொள்கின்ற கட்சிகள், மீண்டும் சரிசெய்ய முடியாதளவு இனவாதத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலைமைக்கு, சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய இடதுசாரி முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் போரின் போது, ஒரு இடதுசாரி முகத்துடன் மூடி மறைத்து இனவாதத்தை தூண்டினர். முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாதது போல் இப்போது இருக்கின்றனர். இனவாத நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய எந்தவொரு கட்சியையும் ஒரு இடதுசாரி கட்சி என்று நான் நினைக்கவில்லை.

‘இந்த முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தின் நோக்கம், அரசாங்கக் கொள்கைகளுக்கு மிகவும் பரந்தளவில், பிரதானமாக தொழிலாள வர்க்கத்தினதும் பொது மக்களினதும் எதிர்ப்பை இனரீதியான வழிகளில் பிரித்து பலவீனப்படுத்துவதாகும். கவிஞர் அஹ்னப் ஜஸீமின் தடுத்து வைப்பு அந்த திசையிலான ஒரு படியே ஆகும்”

மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான மனோ பெர்னாண்டோ:

மனோ பெர்னாண்டோ

‘கலைஞர்கள் தங்கள் படைப்புகளை செய்வதற்கு உள்ள சுதந்திரத்திற்கு தடைவிதிப்பது தொடர்ந்தும் இடம்பெற்று வருவது, கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட கவிஞர் அஹ்னப் ஜஸீமின் தலைவிதி மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. அவரது தொடர்ச்சியான தடுப்புக்காவல், நீதித்துறை சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தை வெளிப்படையாக கிழித்தெறியப்படுகிறது. மத வெறியர்கள் கூறுவது போல், அஹ்னப்பின் கவிதைகளில் தேசத்தவர்களுக்கு இடையில் அல்லது மதங்களுக்கு இடையிலோ வெறுப்பை சித்தரிக்கவில்லை. அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் எந்தவொரு தொடர்பும் இருப்பதாக இன்றுவரை நிரூபிக்க முடியவில்லை.

‘அஹ்னப்புக்கு எதிரான இந்த வேட்டையாடல் இராஜபக்ஷ அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கும் தாக்குதலினதும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் அதன் அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்குமான, முஸ்லீம் விரோத ஆத்திரமூட்டலின் ஒரு பகுதியாகும். கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அரச ஆத்தரமூட்டல்கள், நெருக்கடியில் மூழ்கியுள்ள முதலாளித்துவ முறைமையின் விளைவாகும். எனவே, ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான போராட்டம், தவிர்க்க முடியாமல் முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டமாகும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டம் இல்லாமல் அதை வெல்ல முடியாது என்று கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு வெளிப்படுத்திய கருத்தை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். அந்த அடிப்படையில், அஹ்னப் ஜஸீமை விடுவிப்பதற்கான அந்த நடவடிக்கை குழு முன்னெடுக்கும் போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.”

கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான சிந்தக தொடம்பேகம:

முஸ்லீம் அடிப்படைவாதத்தை ஊக்குவித்ததாகக் குற்றம்சாட்டி கவிஞர் அஹ்னப் ஜஸீம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எதேச்சதிகாரமான முறையில் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இதுவரை, எந்தவொரு குற்றச்சாட்டையும் தாக்கல் செய்ய அரசாங்கத்தால் முடியவில்லை. ஒரு எழுத்தாளரை அவரது படைப்புகளுக்காக கைது செய்வது கருத்துச் சுதந்திரம் மற்றும் கலை சுதந்திரத்தை மறுப்பதாகும்.

‘அடிப்படைத் தேவைகளை இழந்துள்ள மக்கள், அதற்கு எதிரான போராட்டத்திற்கு வந்துள்ள நிலைமையில், அந்தப் போராட்டத்தை திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்ட இனப் பதட்டங்களை கிளறிவிடுவது, இந்தக் கைதின் பின்னால் இருக்கின்ற விடயமாகும். முன்னதாக ஒரு சிறுகதையை எழுதியிருந்த சக்திக சத்குமாரா, பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இதேபோன்ற பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டார்.

‘அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம், அஹ்னப்பை விடுதலை செய்ய முடியாது என்ற கலை மற்றும்கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவின் கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரையும், சர்வதேச சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் அணிதிரட்டிக்கொண்டு, இந்த போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழு எடுக்கும் முயற்சிகளையும் நான் ஆதரிக்கிறேன்.”

கலாநிதி விமல் ரனதுங்க (அரசு தகவல் அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்):

‘நான் கவிஞர் அஹ்னப் ஜஸீம் சம்பந்தமாக ஆர்வமாக உள்ளேன், ஏனென்றால் நானும் இலக்கியம், கலை மற்றும் பல்வேறு துறைகளில் ஒரு ஆராய்ச்சியாளராக இருக்கிறேன். இனவாதம், அடிப்படைவாதம் ஆகிய விஷமத்தனமான முத்திரையின் கீழ், அவரை ஒரு வருடத்திற்கும் மேலாக மௌனிக்கச் செய்துள்ளனர். இது மனித வரலாறு முழுவதும், கொடூரமான ஆட்சியாளர்களால் இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.

இது தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சியின் அக்கறையை நான் பாராட்டுகிறேன். அவரது விடுதலையைப் பாதுகாக்க செயல்படும் கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழுவின் நடவடிக்கைகளை நான் ஆதரிக்கிறேன்.’

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலக உதவியாளர் உபாலி சேனரத்ன:

‘பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கவிஞர் அஹ்னப் ஜஸீமின் விடுதலையைப் வெல்வதற்காக, சோசலிச சமத்துவக் கட்சியும் கலை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவும் முன்னெடுக்கின்ற அரசியல் அணுகுமுறையை நான் பாராட்டுகிறேன்.’

ரங்கம மகா வித்யாலயாவின் ஆசிரியரான சுமித் பிரசன்ன:

‘இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களைத் தூண்டிவிடுவதை தொடர்ந்து செய்து வருகின்றது. இது ஆட்சி செய்வதை எளிதாக்குவதற்கு செய்வதாகும். அதன் ஒரு பகுதியாக கவிஞர் அஹ்னப் ஜஸீமும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயங்களை சரியாக ஆராயும்போது, கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.”

கார்ட்டூனிஸ்ட் சந்துனி சோமரத்ன:

கலை மற்றும் கருத்து சுதந்திரம் அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது. இது இனம், மதம் மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள உரிமை அல்ல. அஹ்னப்பின் கருத்து சுதந்திரத்தை மிகவும் அருவருப்பான முறையில் அடக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த உரிமைக்காக அனைவரும் அணிதிரட்ட வேண்டும்.”