ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நிறுத்தி, எமது ஊடக சங்கத்தினதும், அதில் பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் குறித்த ஒன்றியம், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனநாயக விரோதச் செயல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து, அவர்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.
“எமது ஊடக சங்கத்தின் செயலாளர் செல்வக்குமார் நிலாந்தனை, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு கடந்த 12ஆம் திகதி அழைத்து, சுமார் மூன்று மணி நேரம் விசாரணை
நடத்தியுள்ளனர்.
“இதன்போது, எமது செயலாளரிடம் அவரது பேஸ்புக், மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல தனிப்பட்ட விவரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் பெற்றுக்கொண்டதுடன், குறித்த கணக்குகளுக்கான கடவுச்சொற்களையும் வழங்குமாறு கோரியுள்ளனர்.
“இவ்வாறு தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது, மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலரை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“எனவே, இது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி, ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகளை நிறுத்தி, எமது ஊடக சங்கத்தினதும், அதில் பதவி வகிக்கும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

