போர்ட் சிட்டிக்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை உள்ளிட்ட 5 பேர் கைது

226 0

கொழும்புத் துறைமுக நகரப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, நேற்று (19) தெரிவித்தார்.

துறைமுக நகரத்துக்கும், கொழும்புத் துறைமுகத்துக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குறித்த பணிகளுக்கு மனிதவளத்தை வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளரான சீன பிரஜை,
மேலும் நான்கு நபர்களுடன் அனுமதியின்று உள்நுழைய முயற்சித்துள்ளார்.

இதன்போது, கொழும்புத் துறைமுகத்தில் விமலதர்ம சோதனை சாவடியில் கடமையில் இருந்த அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு, கரையோரப் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சீன நபர், துறைமுகத்துக்குள் பிரவேசிக்கும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனுமதிப்பத்திரம் இன்றி, இவ்வாறு ஏனைய நபர்களை துறைமுக நகரப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சீனப் பிரஜையுடன் கைது செய்யப்பட்ட மற்றைய நால்வரும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், மேலதிக
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.