மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி- 2021 யேர்மனியின் தென்,தென்மேற்கு மாநிலங்கள்.

1993 0

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் உப அமைப்பான தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் தமிழாலய மாணவர்களையும் அதனூடாக அந்த நகரத்தில் உள்ள வீரர்களையும் இணைத்து வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கொரோனா விசக்கிரிமியின் பரவல் காரணமாக சென்ற வருடம் தடைப்பட்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமே.

2021 ற்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கொரோனா விசக்கிருமியின் தாக்கங்களுக்கு முகம்கொடுத்தபடி அதன் விதிமுறைகளைக் கடைப்பிடித்தபடி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இரண்டு மூன்று மாநிலங்களை இணைத்து ஒரு இடத்தில் நடாத்துவதாக திட்டமிடப்பட்டது.

அந்த வகையில் 10.7.2021 சனிக்கிழமை யேர்மனியின் தென், தென்மேற்கு மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களுக்கான போட்டிகள் யேர்மனியின் தென்மேற்கு மாநில நகரமாகிய பென்ஸ்கைம் நகரத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கொரோனாகிருமியின் பிடியிலிருந்து மெதுவாகத் தங்களை விடுவித்துக் கொண்ட மக்கள் முதன்முறையாக விளையாட்டு மைதானத்தில் தங்கள் பிள்ளைகளுடன் கூடியிருந்த காட்சி அனைவரின் மனங்களிலும் ஆர்வத்தை அள்ளி வீசியபடியிருந்தது.

இந்த மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களில் கொரோனா அச்சத்தை வென்றபடி 16 தமிழாலயங்களிலிருந்து 170 போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். விளையாட்டுப் போட்டிகள் ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு யேர்மனிய தேசியக்கொடியுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. பின்பு தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அகவணக்கத்தின் பின்பு வீர வீராங்கணைகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தியபடி மைதானத்தைச் சுற்றிவந்து சுடரை ஏற்றிவைத்தபின்
போட்டிகள் ஆரம்பமாகின.

இறுதியில் 212 புள்ளிகளைப் பெற்று முன்சன் தமிழாலயம் முதலாவது இடத்தையும்
156 புள்ளிகளைப் பெற்று ஸ்ருட்காட் தமிழாலயம் இரண்டாவது இடத்தையும்
134 புள்ளிகளைப் பெற்று பென்ஸ்கைம் தமிழாலயம் மூன்றாவது இடங்களையும் பெற்றுக் கொண்டன.

இறுதியில் தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலுடன் போட்டி நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

அடுத்து யேர்மனியின் மத்தி, வடமத்திய மாநிலங்கள் இணைந்த மாவீரர் வெற்றிக்கிண்ண மெல்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனியின் ஆன்ர்ஸ்பேர்க் நகரத்தில் 14.8.2021 நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.