வடக்கில் 60வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவத்தினரே தடுப்பூசி போடுகின்றனர்-ஆ.கேதீஸ்வரன்

347 0

வடமாகாணத்தில் 60வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இராணுவத்தினராலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுகாதார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என்று வடமாகாண சுகாதாரசேவைகள் திணைக்களப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (05) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு மாவட்டங்களான கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இராணுவத்தினரால் 60வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் வவுனியாவில் 60வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை இவ்விடயம் குறித்து வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனினும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம். மகேந்திரனிடம் தொடர்பு கொண்டு வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்று வினவியபோது இவ்விடயம் குறித்து வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொள்ளுமாறு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.