நல்லாட்சியில் காணப்பட்ட குறைபாடுகளால் நாடு 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. அதனையடுத்து மேலும் இரண்டு வருடங்கள் கொவிட் பரவலால் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே யுத்த காலத்தில் நமக்காக நாம் ஒன்றிணைந்ததைப் போன்று பொருளாதாரத்தை மேம்படுத்த, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
22 மில்லியன் மக்களதும் நாட்டினதும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்களுக்கமைய நாட்டை முடக்காதிருக்க வேண்டும்.
இதன் ஊடாக சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமெனில் நாட்டை முடக்கி வைத்திருக்க முடியாது.
சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாட்டை முடக்காமல் நடத்திச் செல்ல வேண்டும். 22 மில்லியன் மக்களதும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமெனில் சுற்றுலாப்பயணிகள் வருகை தர வேண்டும் என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
22 மில்லியன் மக்களது பொருளாதாரம் முதலீடுகள் மூலமே வலுப்படுத்தப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் எம்மால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது.

