மதுரை காப்பகத்தில் மேலும் 10 குழந்தைகள் விற்பனை

188 0

தலைமறைவான சிவக்குமார் கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு தப்பி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் அறக்கட்டறை என்ற பெயரில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வந்தார்.

இந்த காப்பகத்தில் தங்கியிருந்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண்ணின் ஒரு வயது குழந்தை மாணிக்கம் இறந்துவிட்டதாக நாடகம் ஆடி, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்தது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இன்னொரு குழந்தையும் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 2 குழந்தைகளும் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. குழந்தைகள் லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோரது உத்தரவின் பேரில் இந்த வழக்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட காப்பகம் சீல் வைக்கப்பட்டு அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர் மற்ற காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் போலி ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளை விற்ற புகாரின் பேரில் காப்பக பெண் நிர்வாகி கலைவாணி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சிவக்குமாரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தலைமறைவான சிவக்குமார் கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு தப்பி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

இதனிடையே மதுரை மாட்டுத்தாவணியில் செயல்பட்டு வரும் இதயம் அறக்கட்டளை உதவி மையத்தில் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த தடுப்பூசிகள், மருந்து-மாத்திரைகள், கலெக்டர் அலுவலக முத்திரையுடன் கூடிய எழுதப்படாத ஆவணங்கள் மற்றும் தத்தனேரி சுடுகாட்டில் வழங்கப்படும் கையெழுத்து இடப்படாத போலி விண்ணப்பங்கள் ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த உதவி மையம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுத்தாவணியில் அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்துள்ளது. அங்கிருந்த பதிவேடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தில் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோர் தங்கி இருந்ததற்கான ஆவண குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குழந்தைளுடன் தங்கி இருந்ததும் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான முழுமையான ஆவணம் மற்றும் அவர்களது முகவரி உள்ளிட்ட குறிப்புகள் எதுவும் இந்த பதிவேட்டில் இல்லாதது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி கடந்த சில வாரங்களாக அந்த மையத்தின் செயல்பாடுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கைப்பற்றப்பட்ட பதிவேட்டில் இதுவரை 74 பேர் இறந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 30 பேர் மரணம் அடைந்ததாக குறிப்புகள் உள்ளன. அவர்கள் உண்மையிலேயே மரணம் அடைந்தார்களா? அல்லது இவர்களது மரணத்திலும் மர்மம் உள்ளதா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

காப்பகத்தில் தங்கி இருந்த மேலும் 10 குழந்தைகள் தொடர்பான ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. எனவே இந்த குழந்தைகளும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள சிவக்குமார், மதார்சா மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட கலைவாணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினால்தான் முழு விவரம் தெரியும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடயே இந்த வழக்கில் கைதாகி நிலக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைவாணி உள்ளிட்ட 7 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ள போலீசார் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த ஆதரவற்றோர் சிலரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இன்னும் ஓரிரு நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக மதுரை நகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வழக்கு ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மதுரை காப்பகத்தில் நடந்த குழந்தைகள் விற்பனை தொடர்பாக தினமும் பல்வேறு தகவல்கள் பூதாகரமாக வெளிவரும் நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தினால் இதில் தொடர்புடைய மேலும் பல குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.