பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்- விஜேசந்திரன்

198 0

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களையும், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாபதியின் பொது மன்னிப்பில் அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்கின்ற அதே நேரத்தில் விடுதலை செய்யப்படாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் மிகச் சிறிய குற்றங்களை செய்தவர்களாகவே இருக்கின்றார்கள்.ஆனால் இன்று பாரிய குற்றங்களை புரிந்தவர்கள் கூட ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுகின்றார்கள்.

கடந்த பல வருடங்களாக பயங்கவராத கால சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ள பல இளைஞர்கள் வழக்கு தாக்கல் செய்யபப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று இலங்கையில் பலரும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுகின்ற இந்த சந்தரப்பத்தில ஏன் ஏனைய இளைஞர்கள் தொடர்பாக ஜனாதிபதி சிந்தித்து பார்க்க முடியாது.

சிறையில் வாடுகின்ற இளைஞர்களின் குடும்பங்கள் இன்று பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். அவர்களுடைய காலங்கள் வெறுமனே சிறைகளில் வீணடிக்கப்படுகின்றது. எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் மிகுதியானவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.