வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்

240 0

northern_mapவட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனங்கள் வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளானர்.

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேற்று கிளிநொச்சி நகரில் நடத்திய கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் கல்வி வலயங்களில் எவ்வித ஊதியமும் இன்றி நீண்ட காலமாக சேவையாற்றிவரும் தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வடமாகாண ஆளுனர் செயலகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது, இந்த வருடம் முடிவுற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும், மத்திய கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் அவர்களும் அதே வாக்குறுதியை அளித்த போதிலும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரையும், நாளை முதல் ஆளுனர் அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் தாம் ஈடுபடவுள்ளதாகவும், தை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, தாம் தொண்டர் ஆசிரியர்களாக அல்லாது, நிரந்தர ஆசிரியர்களாக கடமையாற்றுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தினை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.