ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் வெற்றி

253 0

201612241023573717_un-security-council-demands-end-to-israel-settlement_secvpfபாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் அரசு அமைத்துவரும் குடியிருப்பு பகுதி தொடர்பான கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டது.

1967-ஆம் ஆண்டு நடந்த நீண்ட போரின் இறுதியில் பாலஸ்தீன நாட்டில் இருந்து கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் அடாவடியாக பறித்தது. இப்பகுதியை இஸ்ரேலுக்கு சொந்தமானதாக சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

சமீபகாலமாக, பாலஸ்தீன நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் கிழக்கு ஜெருசலேமிற்கு நெருக்கமாக இஸ்ரேல் கட்டிவரும் சட்டவிரோத குடியிருப்பு (செட்டில்மென்ட்) வீடுகள் பிராந்தியத்தின் அமைதிக்கு முக்கிய அச்சுறுத்தலாக அமையலாம் என்று உலக நாடுகள் அச்சப்பட்டன.

இஸ்ரேல் மற்றும் அதன் அண்டைநாடான பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சனைக்கு முடிவுகட்டும் ‘இரு நாடுகள்’ என்ற தீர்விற்கு முக்கிய தடையாக இஸ்ரேல் கட்டி வரும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இரு நாடுகள் பரிகாரத்தை சாத்தியமற்றதாக மாற்றவேண்டும் என்பதே இஸ்ரேலின் எண்ணமாக உள்ளது என்று ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியது.

ஹார்ஹோமா, கிலோ, கிவாத் ஹமடோஸ் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவந்த குடியிருப்பு கட்டுமானங்கள் மட்டுமின்றி, இவ்வாண்டு இறுதியில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் பெத்லஹமிற்கு இடையே மேலும் சில குடியிருப்புகளை கட்டும் பணிகளை துவக்க இஸ்ரேல் முயற்சிப்பதாக அவ்வறிக்கை தெரிவித்திருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் 5 ஆயிரம் குடியிருப்புக்களை கட்டுவதற்கான இஸ்ரேலின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சர்வதேச எல்லைக்கோட்டு சட்டத்தை மீறிய வகையில் அப்பகுதியில் நடந்துவரும் கட்டுமானப் பணிகளை எல்லாம் உடனடியாக தடுத்து நிறுத்தவும் நியூசிலாந்து, மலேசியா, வெனிசுலா, செனெகல் ஆகிய நாடுகளின் சார்பில் நேற்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின்மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம்வகிக்கும் 15 நாடுகளும் வாக்களிக்க இருந்த நிலையில், தனது வெட்டுரிமை (வீட்டோ) அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தி மேற்கண்ட தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், தற்போதைய அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு அவரது ஆலோசனையை நிராகரித்தது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்காமல் அமெரிக்கா நடுநிலை வகித்தது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் மொத்தம் உள்ள 15 நாடுகளில் 14 நாடுகளின் அமோக ஆதரவுடன் இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை பாலஸ்தீன அரசு கொண்டாடிவரும் அதேவேளையில், தன்னை கைவிட்ட அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

எங்கள் நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலை கட்டுப்படுத்தக்கூடிய இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும் என கூறியுள்ளார்.