சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க பென்டகன் அனுப்பிய சிறப்புக் கண்காணிப்புக் குழு

289 0

p-8a-poseidon-1-1இம்மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் ஒரு வாரகால கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், அம்பாந்தோட்டையிலுள்ள மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அமெரிக்க கடற்படை அதிகாரிகள் சிறிலங்காவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர்- அதாவது டிசம்பர் 13 அன்று, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் இது தொடர்பாக தகவல் வெளியிடுவதற்கு முன்னர், ஊடகங்களில் இது தொடர்பாக எவ்வித செய்தியும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க இராணுவத்திற்கும் சிறிலங்கா பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையிலான இராணுவ உறவை விரிவுபடுத்தும் ஒரு நோக்காகவே இக்கூட்டுப் பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பத்தாவது ரோந்துப் படை அல்லது புளோரிடாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் ‘ரெட் லான்சர்ஸ்’ பிரிவைச் சேர்ந்த அமெரிக்கக் கடற்படை வீரர்களே சிறிலங்காவில் இராணுவப் பயிற்சிகளை வழங்கியதாக அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கடல் சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு முக்கிய கடல் வழிகளையும் வர்த்தகப் பாதைகளையும் பாதுகாப்பதற்குமான ஒரு பயிற்சி நடவடிக்கையாகவே இது காணப்பட்டதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த எமது நண்பர்களுடன் பங்காளிகளாக இருப்பதில் அமெரிக்க மகிழ்வடைகின்றது. அத்துடன் அமெரிக்க இராணுவ விமானமான P-8A இன் திறமைகளை வெளிப்படுத்துவதிலும் வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பரிமாறிக் கொள்வதிலும் அமெரிக்கா மகிழ்வடைகிறது’ என சிறிலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள் குழுவின் மூத்த அதிகாரி லெப்ரினன்ட் அந்தோனி பெரேஸ் தெரிவித்த கருத்தை அமெரிக்கத் தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள் குழுவானது P-8A போசிடன் விமானத்திலேயே சிறிலங்காவை வந்தடைந்தனர். இந்த வான்கலமானது இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதுடன் இது உலகின் முன்னணி வாய்ந்த யுத்தக் கண்காணிப்பு விமானமாகவும் கருதப்படுகிறது.

p-8a-poseidon-2

‘இந்த விமானமானது நீண்ட தூர நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தரையில் இடம்பெறும் யுத்தமுனைப்புக்களைக் கண்காணிப்பதற்காகவும், யுத்த நடவடிக்கைகளில் புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளை மேற்கொள்வதற்குமாக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது’ என P-8A போசிடன் விமானத்தைத் தயாரிக்கும் போயிங்க் நிறுவனம் தெரிவித்தது.

இவ்விமானத்தின் முன்னைய வடிவான, நான்கு P-8I  விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றை இந்தியா போயிங் நிறுவனத்துடன் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தமானது அமெரிக்க – இந்திய இராணுவ உறவுகளைப் பலப்படுத்துவதற்கான ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே இந்தியாவிடம் இந்த வகை விமானங்கள் எட்டு உள்ளன. கார்பூன் ஏவுகணைகள், இலகு ரக ரோப்பிடோக்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற இந்த வகை விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்திய மாக்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிப்பாக சிறிலங்காவில் தரித்து நின்ற சீன நீர்மூழ்கிகளைக் கண்காணிப்பதற்கு இந்தியக் கடற்படையால் P-8I  விமானங்களே பயன்படுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத் திறன்களை அமெரிக்கா விருத்தி செய்யும் அதேவேளையில், சிறிலங்கா இராணுவத்துடனும் தனது உறவை விரிவுபடுத்துவதில் அமெரிக்கா செயற்படுகிறது. இது இந்திய மாக்கடலில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதையே நோக்காகக் கொண்டுள்ளது.

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் சீனாவின் பிரசன்னத்தை எதிர்த்து அமெரிக்காவால் மிகப் பலமான கடற்படைக் கண்காணிப்பு கூட்டணி ஒன்று உருவாக்கப்படுவதாகவும், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவக் கூட்டணியில் முக்கியத்தும் மிக்க இரு நாடுகளான யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் இந்தியாவும் முன்னணி மிக்க நாடாகத் திகழ்வதாக கடந்த மாதம் காலியில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் தெரிவித்தார்.

கட்டளைத் தளபதி ஹரிஸ், சிறிலங்காவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க ஆழ்கடல் துறைமுகமான திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போது சிறிலங்கா கடற்படை வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றனர்.

பசுபிக் பிராந்தியத் தளபதி சிறிலங்காவிற்கு வருகை தருவதற்கு முன்னர், அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘யுஎஸ்எஸ் சோமசெற்’ திருகோணமலை துறைமுகத்தில் மூன்று நாட்கள் தரித்து நின்றதுடன் சிறிலங்கா கடற்படை வீரர்களுக்கு  இராணுவ மற்றும் சிறிய படகு நடவடிக்கைப் பயிற்சிகளையும் வழங்கியது.

இந்திய மாக்கடலில் சீன எதிர்ப்பு இராணுவக் கூட்டணியை விரிவுபடுத்தும் அதேவேளையில், தென்சீனக் கடலிலுள்ள சீனாவால் அபகரிக்கப்பட்டுள்ள தீவுகளுக்கு அருகில் தொடர்ந்தும் அமெரிக்கா கண்காணிப்பில் ஈடுபடுகிறது.

தென்சீனக் கடலில் சுதந்திரமான கடற் போக்குவரத்து நிலவுவதாக பொய்யான அறிவித்தல் விடுக்கப்பட்ட போது, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தால் தென்சீனக் கடலிற்கு சில போர்க்கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான முறுகல்நிலையை மேலும் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை, சீனக் கடற்கலம் ஒன்று தென்சீனக் கடலில் கண்காணிப்பில் ஈடுபட்ட அமெரிக்க வேவு விமானம் ஒன்றை முற்றுகையிட்டது. சீனாவின் இந்தச் செயற்பாடானது சட்டத்திற்கு முரணானது என அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளின் முன்னர், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை ஓரங்கட்டுவதற்கான அமெரிக்காவின் பூகோள மூலோபாய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சீனாவிடமிருந்து விலகிச் செயற்படுமாறு முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு அமெரிக்காவால் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான சூழலையும் அமெரிக்கா ஏற்படுத்தியது. இதன் பெறுபேறாக சீனாவிற்கு ஆதரவு வழங்கிய மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பதிலாக அமெரிக்க ஆதரவாளரான மைத்திரிபால சிறிசேன ஜனவரி 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தல் மூலம் சிறிலங்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் பின்னர், சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் இணைந்து அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்குச் சார்பான வெளியுறவுக் கோட்பாட்டை உருவாக்கினர். இதன்மூலம் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா இராணுவத்துடனான உறவைப் பலப்படுத்துவதற்கான திட்டங்கள் இணைக்கப்பட்டன.

எனினும், அமெரிக்காவானது இத்தகைய நகர்வானது சிறிலங்கா இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் மட்டுமே எனக் காண்பிக்க முயல்கிறது. சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர்த் திட்டங்களில் சிறிலங்கா எவ்வளவு நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தினால் தனது பணியாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பு ஏற்படலாம் என கொழும்பு அச்சப்படுவதன் காரணமாகவே அமெரிக்காவுடனான இராணுவ சார் உறவு தொடர்பான தகவல்களை வெளியிடாமைக்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆங்கிலத்தில்  – Pradeep Ramanayake
வழிமூலம்        – World Socialist Web Site
மொழியாக்கம்  – நித்தியபாரதி