நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருக்கின்றது- சுரேஷ். க.பிரேமச்சந்திரன்

301 0

suresh-premachandran-in1234அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ். க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரருடன் விஜயம் செய்த நீதி அமைச்சரும்,

புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ச, அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட சந்திப்பை நடத்தினார்.

குறித்த விசேட சந்திப்பில், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பட்டியே சுமனரத்ன தேரரின் அநாகரிகமான நடவடிக்கைகள் தொடர்பாகவும், அவருடைய நடவடிக்கைகளினால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் தேரர் ஈடுபடக்கூடாதென்றும் வலியுறுத்தப்பட்டது.

அவற்றை ஏற்றுக்கொண்ட நீதியமைச்சர் பொதுபலசேன செயலாளரையும் மட்டக்களப்பு விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் ஊடகவியலாளருடன் பேசிய அமைச்சர், மட்டக்களப்பில் சிங்கள மக்கள் குறித்து குரல் கொடுப்பதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லையென்றும், மட்டக்களப்பு விகாராதிபதி சுமனரத்ன தேரர் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

எனவே இத்தகையவர்களிடமிருந்து நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது.

ஓர் அரசியல் சாசன மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சூழலில், நீதியமைச்சரின் கருத்துக்களும், செயற்பாடுகளும் ஏனைய தேசிய இனங்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களையும், அச்சவுணர்வுகளையுமே உருவாக்குகின்றது. இதனை எமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், அமைச்சர்கள் இவ்வாறாக பக்கசார்பாக நடந்து கொள்வதானது நாட்டில் நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்புவதற்கு வழிசமைக்காது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.