ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

383 0

201612220931214337_political-party-leaders-demand-should-dismissal-ramamohana_secvpfவருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ராமமோகன ராவின் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதோ, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோ எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. என்றாவது ஒருநாள் இப்படியெல்லாம் நடக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்தது தான்.

ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பணியில் உள்ள தலைமைச் செயலாளர் வீட்டில் முதன்முறையாக சோதனை நடத்தப்படுவதும், இத்தகைய ஊழல்வாதி தான் கடந்த 6 மாதங்களாக ஊழலை ஒழிப்பதற்கான தமிழக அரசின் கண்காணிப்பு ஆணையராக பணியாற்றி வந்தார் என்பதும் தான் தமிழகத்தின் குடிமகன் என்ற முறையில் வேதனை அளிக்கிறது. இந்த சோதனைகளால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. எனது அறிவுரையை தமிழக அரசு கேட்டிருந்தால் இன்று இந்த தலைகுனிவு ஏற்பட்டிருக்காது.

எனவே, வருமானவரி சோதனையும், நடவடிக்கையும் தலைமைச் செயலாளருடன் நின்று விடாமல் அவருக்கு மேல் அதிகார நிலையில் இருப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமும் நடத்தப்பட வேண்டும். மேலும் ஊழல் புகாருக்கு உள்ளான ராமமோகன ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மதுரையில் நேற்று அளித்த பேட்டியில், ‘தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதை பார்க்கும்போது மத்திய பா.ஜ.க. அரசு மறைமுகமாக தமிழக அரசியலில் சில காரியங்களை சாதிக்க நினைப்பது தெரிகிறது’ என்று தெரிவித்தார்.

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு சம்பவமாக தற்போது பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் அவருடன் சம்பந்தபட்ட 13 இடங்களிலும் காலை முதல் வருமான வரி துறையினர், மத்திய ராணுவப்படை, அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. துணையோடு சோதனை நடத்துகின்றனர் என்ற செய்தி ஆட்சியாளர்கள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் ஒரு படி மேலாக தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் 10 பேர் கொண்ட குழு சோதனையிடுகிறது என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமே தலைகுனிவை சந்திக்கும் நிகழ்வாகவே இதை நான் கருதுகிறேன்.

இவர்களின் இதுபோன்ற செயல்களால் தமிழகத்தில் பல நல்ல தலைவர்கள் ஆட்சி செய்த தலைமைச் செயலகம் இன்று களங்கப்படுத்தப்படுகிறதே என்று எண்ணும் பொழுது பெரும் வேதனை தருகிறது. தமிழகத்தில் நன்மைக்காக தட்டிக்கேட்கும் தைரியம் மிக்க ஆட்சி வர வேண்டிய தருணமாக பார்க்கத்தோன்றுகிறது. எனவே தமிழகத்திற்கும், தலைமைச் செயலகத்திற்கும் ஏற்பட்ட இந்த நிலை, இனிவரும் காலங்களில் நிகழா வண்ணம் தமிழர்களாகிய நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதுதவிர தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரின் அறையும் சோதனையிடப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கே தலைகுனிவாகும். மேலும் வருமான வரித்துறையின் அதிரடி சோதனைக்கு தலைமைச் செயலாளர் உள்ளாக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த பதவியில் நீடிப்பதற்கான தகுதியை அவர் இழந்து விடுகிறார். எனவே தமிழக அரசு உடனடியாக ராமமோகன ராவை தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். இவரோடு தொடர்புடையவர்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தலைமைச் செயலாளருடைய அலுவலகத்திலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றிருப்பது என்பது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரை, இழுக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் முதல் முறையாக தலைமைச் செயலாளர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை பல சந்தேகங்களை எழுப்புகிறது. அதிகாரிகளின் வீடுகளில் பெரிய அளவில் சோதனை நடைபெறுவது என்பது ஆட்சியாளர்களின் பலவீனத்திற்கு எடுத்துக் காட்டு. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பது தான் பொதுமக்களின் எண்ணமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசின் தலைமை செயலகத்துக்குள் நுழைந்து தலைமை செயலாளர் அறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தமிழகத்திற்கு பெரிய அவமானம். ராமமோகன ராவை முதல்- அமைச்சர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிந்தும் தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?’ என்று கூறியுள்ளார்.