தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற திருமாவளவன் கூறி உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் தலைமை செயலாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை நடந்துள்ளது. இதுவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக வரலாறு இல்லை. முதன் முறையாக நடைபெற்ற இந்த சோதனை குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும்.
இல்லையென்றால் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியது போல இதற்கு அரசியல் சாயம் பூசப்படும். தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கூட இந்த சோதனை நடைபெற்று இருக்கலாம்.
சி.பி.ஐ., மத்திய அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை எங்கு வேண்டும் என்றாலும் சோதனை நடத்தும் அதிகாரம் கொண்டது. ஆனால் பா.ஜனதா ஆட்சி இல்லாத டெல்லி மற்றும் தமிழகத்தில் அதிகளவு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பின்னர் குன்னூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-
பிரதமர் மோடி திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் கடுமையான அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கருப்பு பணத்தை ஒழிக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளை அரசு எடுத்து நடத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்படுகிறது. மருத்துவ படிப்பில் சேர ஒரு கோடி வசூல் செய்யப்படுகிறது. இந்த பணம் கருப்பு பணமாக மாற்றப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

