பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த நிலையிலும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட கால தவணை அடிப்படையில் வாகனங்களை வழங்குவதற்கு ஆலோசனை வழங்கி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தவணை நிறைவேறும் காலப்பகுதிக்கு பின்னர் நிலவும் பெறுமதிக்கு அமைய, அந்த வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொள்வனவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த முடியும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய பாராளுமன்றத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தெரிவு செய்யப்பட்ட மேலும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட கால தவணை அடிப்படையில் வாகனங்களை வழங்குவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் இந்த பிரேரணையில் கைச்சாத்திடாமையால் இந்த செயற்பாடு தாமதமடைந்துள்ளது.மாதாந்தம் 5 இலட்சம் ரூபா மற்றும் 3000 கிலோமீற்றர் என்ற எல்லைக்குள் இந்த தவணை முறை பிரேரிக்கப்பட்டுள்ளது.இதற்காக இரண்டு நிறுவனங்கள் முன்வைத்த விலைமனுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அரச கொள்முதல் நடைமுறையை பின்பற்றுவதே சிறந்தது என ஜனாதிபதியும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெட் மற்றும் ஏனைய வரிகளுடன் மாதாந்த வாடகையை சேர்க்கும் போது 7 இலட்சம் ரூபா வரை செலவாவதால், ஒரு கிலோமீற்றருக்கு 250 ரூபா செலவிடப்படுகின்றமை மேலதிக செலவு என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும்.நிலைமை இவ்வாறு இருக்கும் போது, குறித்த இரண்டு நிறுவனங்களில் ஒன்றை பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உப குழு தெரிவு செய்துள்ளது. இதற்கமைய, 60 மாத காலத்திற்கு தவணை கொடுப்பனவை செலுத்தி 58 வாகனங்களைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பதவிக்காலம் 45 மாதங்களில் நிறைவடைகின்ற நிலையில், 60 தவணைகளுக்கு வாகனங்களைப் பெற்றுக்கொள்வது ஏற்புடையது அல்லவென பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் நிமல் போபகே குறிப்பிட்டார்.செயலாளர் இந்த பிரேரணைக்கு இணங்காத நிலையில், பிரதமர் நேற்று நிதி அமைச்சின் செயலாளருக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தவணைக்காலம் நிறைவடைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த வாகனத்தைக் கொள்வனவு செய்ய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உப குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.வெல்யு டிரேடிங் மற்றும் டுயோ சுமி பவர் மார்க்கட்டிங் என்று இரண்டு நிறுவனங்கள் இணைந்து சமர்ப்பித்த விலை மனுவே தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஜப்பான் பிரஜைகளும் இலங்கையர் ஒருவரும் பணிப்பாளர்களாகக் கடமையாற்றும், இந்த நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதி 150 இலட்சம் ரூபாவாகும்.15 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளைக் கொண்ட இந்த நிறுவனத்திடம் இருந்து 58 வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 2436 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்காக கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் ஊடாக 350 மில்லியன் காப்புறுதியை முன்வைக்குமாறு அந்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

