மயிலிட்டி துறைமுகப் பகுதியை விடுவிக்க இணக்கம்!

238 0

m-sanathiமயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்றைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில்; இடம்பெற்றது.

இதில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் நடைபெறும் பொழுது அந்தந்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.எமக்கு தெரியாது என நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் தெரியாமல் இங்கு இருக்கிறோம் என நினைப்பவர்கள்.எமது காணிகள் தொடர்பில் 100 தடவை பேசினால் நான் ஆயிரம் தடவை பேசுவேன். அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளில் தான் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

இராணுவத்தினரின் தேவைக்கு காணிகள் அபகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக நட்டஈடு கொடுப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அது எம்மால் நிறுத்தப்பட்டது.விடுவிக்கப்படாத பல பகுதிகளை எமது முயற்சியால் விடுவித்துள்ளோம். முரணான வகையில் உருவாக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பலவற்றை நிறுத்தியுள்ளோம். இவ்வாறு பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.

மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசமும் விடுவித்தால் மாத்திரமே மீள்குடியேற்றம் நிறைவு பெறும் என ஆணித்தரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கூறியிருக்கிறேன். அதற்கு அவர்கள் உடன் பட்டுள்ளார்கள்.எமது பகுதியில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் விடுவிக்கும் வரைக்கும் எங்களுடைய முயற்சிகளை நாம் எடுத்துக்கொண்டிருப்போம்.அதேபோன்று பலாலி விமானத்தளம் தொடர்பாக பிரதமரிடமும் இந்திய அரசாங்கத்திடமும் பேசியிருக்கிறோம் அதனை அண்டிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

எங்களுடைய பிரதேசத்தில் முகாமில் இருப்பவர்கள் மட்டும் நிலம் அல்லாமல் இருப்பவர்கள் அல்ல. வெளி இடங்களில் தங்கியுள்ள ஏனையவர்களும் நிலம் அல்லாமல் உள்ளார்கள்.காணிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி பிரதமருட னான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும். அதில் சாதகமான தீர்வு வரும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.