ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள்!

340 0

அன்பான பிரான்சு வாழ் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அனைவருக்கும் எமது புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

01.05.2021
இந்தப்பூவுலகத்தை இன்று புரட்டிப் போட்டிருக்கும் கோவிட் 19 என்னும் கொடிய கிருமியானது பல லட்சம் உயிர்களைப் பலிகொண்டு பலகோடி மக்களை நோய்தொற்றுதலுக்கு உள்ளாகி வரும் இவ்வேளையில் அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தொழிலாளர்களே இருந்து வருகின்றனர். ஆனாலும் ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு பிரசைகளையும், தமது நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக கருதும் தொழிலாளர்களையும், வர்த்தகத்தையும், வணிகத்தையும் அந்தந்த நாடுகள் ஓரளவு கரங்களில் தாங்கியே பிடித்து வருகின்றனர்.

இந்த உயிர் கொல்லியின் இடர்களுக்கு மத்தியிலும் துணிந்து மக்களுக்காக பணியாற்றும் வைத்தியர்கள், காவல்துறை பாதுகாப்பினர், மருத்துவத்தாதிகள், அனைத்துத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், மனிதநேய செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த அன்பையும் மனிதநேயத்தையும் பகிர்ந்து கொள்கின்றோம்;. அதேவேளையில் இப் பேரிடருக்குள்ளாகி சாவடைந்துபோன அனைத்து உயிர்களுக்கும் எமது இதயவணக்கத்தை செலுத்துவதுடன் அவர்களின் குடும்பத்தினருடன் எமது துயரினையும் இந்நாளில் பகிர்ந்தும் கொள்கின்றோம். இத்துயர் மிக்க நேரத்தில் நாட்டின் அறிவுறுத்தலுக்கமைய தமது சுயபாதுகாப்பைத் தாமே பேணி எமது மக்களுக்கான பணியைச் செய்து வரும் வர்த்தகர்களையும், தொழிலாளர்களையும், அதிரடியாக ஏற்பட்ட இப்பேரிடரால் சிக்குண்டு போன மக்களுக்கு உதவிய தமிழ்ச்சங்கங்கள், வர்த்தகர்கள், தமிழர் கட்டமைப்புகளுக்கும், ஊர் சங்கங்களுக்கும் எம் நன்றி என்கின்ற அன்போடும், ஆற்றுகையோடும் அனைவரின் கரங்களையும் இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.

எமது தாயகத்தைப் பொறுத்தவரை எம் தேசமக்கள் தொடர்ந்தும் பல துன்பங்களை தொடர்ந்தும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். பௌத்த தேசமும், அதன் வழிநடத்துநர்களான புத்த பிக்குகளும் அன்பு, கருணை, காருண்யம், கொல்லாமை, பிறர் பொருளை அபகரியாமை என்ற பஞ்சசீல அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு தமிழ் மக்களைத் துன்புறுத்துவதும், தமிழர் நிலங்களை அபகரிப்பதும், மஞசள் காவியுடையுடன் மதுவுக்கும், மாதுவுக்கும் மண்டியிட்டுப்போய் நிற்பதையே நாம் காண்கின்றோம்.

தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ சிங்கள பேரினவாதிகள் என்றைக்கும் வழி சமைக்கப் போவதில்லை என்பதையே தமிழர் வரலாறும் அந்த வரலாற்றின் வீர புருசர்களும் உலகத்திற்கு உணர்த்தியிருந்தனர். இதனை புரிந்தும் புரியாத மாதிரி இருக்கும் சர்வதேசமே தமிழர்களின் இலட்சியப்பாதையை முறியடிக்க சிங்களத்திற்கு துணைபோனதும் அதனால் மிகப்பெரும் தமிழினப்படுகொலை நடந்தேறியதும் அதிலிருந்து மீண்டெழ வேண்டிய வழிவகைகளை சர்வதேசம் எமக்குப் பெற்றுத்தரவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் தாயகத்திலும், புலத்திலும் அரசியல் சனநாயக வழியில் தமது போராட்டத்தை அனைத்து வழிகளிலும் முன்னெடுத்துக் கொண்டேயிருக்கின்றனர். இதனால் ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்தால் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா தேசத்தின் மீது எடுக்கப்பட்ட தீர்மானமும், அதன் கோபமும், பயத்தின் எதிரொலியாக சிங்கள தேசம் புலம் பெயர்ந்த மண்ணில் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கமைய பதிவு செய்து அரசியல், மனிநேய சமூகப்பணியைச் செய்து வரும் 16 கட்டமைப்புகளையும், மனிதநேயப்பணியாளர்கள், இறந்து போனவர்கள், பணியில் இல்லாதவர்கள் என 577 பேரில் தடையைப்போட்டிருப்பதாகும்.

இவ்வாறு ஏற்கனவே நடைபெற்ற போதும் தமது பணியில் எந்த கட்டமைப்புக்களோ, செயற்பாட்டவர்களோ கிஞ்சித்தும் துவண்டு போகவில்லை. இதிலிருந்து ஒன்று மட்டும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது தாயகத்தில் துன்பப்படும் எம்மவர்களுக்குக் கிடைக்கும் சிறு உதவிகள் கூட சேராமல் செய்ய வேண்டும் என்பதே. ஆனால், எம்மக்களின் மனிதநேயப்பணி என்பது எத்தனை தடைகளையும் தாண்டிப்பயணிக்கும் இதுவே கடந்தகால பாடங்களாகும். இந்த வேளையில் புலத்தில் வாழும் தமிழ்மக்களிடமும், தொழிலாளர்களிடமும், மனிதநேயப் பணியாளர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது

“ உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்! ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள்! ’’

“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’