யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2021

732 0

19 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் கடுமையான நிபந்தனைகளுக்கு முகம் கொடுத்து வந்தார்கள்.10 மணித்தியாலங்களுக்கு அதிகமாக ஓய்வு அற்று தொழில் புரிய வேண்டி இருந்தது.அன்றைய நாட்களில் குறைந்தபட்ச சம்பள கட்டுப்பாடு இருக்கவில்லை என்பதால் தொழிலாளர்கள் மிகவும் சுரண்டப்பட்டார்கள்.

உலகம் முழுதாக தொழிலாளர்கள் தமது கண்டனத்தை தெரிவித்து போராட ஆரம்பித்தார்கள்.சில வருடங்களுக்கு பின்னர் சில மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.அந்தவகையில் மே 1 அனைத்துலக தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தபட்டது.

தொழிலாளர்கள் இத் தினத்தில் தமது நல்ல தொழில் நிலைமைகளுக்காக போராடும் இத் தருணத்தில், வலிசுமந்த மாதத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் இந்த வாய்ப்பை எமது தாயகத்தில் நடைபெற்ற/நடைபெறுகின்ற இனவழிப்பை சர்வதேச சமூகத்தின் கவனத்தில் கொண்டுவரும் வகையில் நடைபெற்ற தொழிலாளர் தின பேரணியில் கலந்துகொண்டனர்.கொரோனா தொற்றுநோயின் மத்தியிலும், அதைக்கேற்ப விதிமுறைகளை கடைப்பிடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பேரணியில்  தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமிழின அழிப்புக்கு நீதி கோரி போராடினார்கள்.

தமிழீழ தேசிக்கொடியுடன், தமிழின அழிப்பிற்கு நீதிகோரும் பதாதைகைளை தாங்கியது, பல்லின மக்களின் கவனத்திற்கு மிகவும் சென்றடைந்தது.

யேர்மன் ரீதியாக பல்வேறு நகரங்களில் நடைபெற்ற மேதின பேரணிகளில் தமிழ் மக்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

1948 ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசால் அடக்கப்பட்டு , அவர்களது இருப்பு அச்சுறுத்தளுக்கு ஆகிவருகின்றது.சிங்கள பேரினவாத அரசால் தமிழர்களின் சமூக, பொருளாதார , கலை கலாச்சார உரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றது.

இயற்கை விவசாயம் வளம் கொண்ட தமிழர் தாயகம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு முகம் கொடுத்து வருகின்றது.சிங்கள அரசு ஈழத்தமிழர்களின் நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றது.இதன் தொடர்ச்சியாக சிங்கள அரசு இனத்துவேச சட்டங்களை இயற்றி ஈழத்தமிழர்களின் கல்விக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. சிங்களம் மட்டும் எனும் சட்டத்தினால் சிங்கள மொழி மட்டும் அரசமொழியாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.சிங்கள அரசு மொழி , கல்வி மற்றும் தொழிலாளர் சந்தை கொள்கையில் இப்படியான திட்டமிட்ட இனத்துவேச பாகுபாடுகளை ஏற்படுத்தியதன் மூலம் இலங்கை தீவை சிங்கள மயமாக்கல் செய்வதே தனது நோக்கமாக கொண்டது.சிங்கள அரசு தமிழர்கள் அற்ற ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்தை கொண்டிருக்கின்றது.

அமைதி வழிகளில் தமது உரிமைகளுக்காக போராடிய ஈழத்தமிழர்கள் மீது பல்வேறு படுகொலைகள் சிங்கள அரசால் அரங்கேற்றப்பட்டது.அதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அமைதி வழியில் போராடிய ஈழத்தமிழர்கள் தமது இருப்பை தக்கவைக்க ராணுவ வழியில் போராட நிர்பந்திக்கப்பட்டார்கள்.உரிமைக்கான போராட்டத்தால் ஏற்படுத்தபட்ட சமாதானகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களுக்கான ஓர் நிழல் அரசை நிறுவினார்கள்.

சமாதானத்தை விரும்பாத சிங்கள அரசு மேலும் ஆயுத வழியில் தமது இறுதிப்போரை மேற்கொண்டு 2009 ஆம் ஆண்டு மே 18 தனது இன அழிப்பை உச்சத்தில் கொண்டுவந்தது.இறுதி 5 மாதங்களுக்குள் முள்ளிவாய்க்கால், தமிழர்களின் ஒரு கிராமம்,ஒரு லட்சத்துக்கும் மேலான தமிழ் மக்களின் குருதியால் நனைந்தது.2009 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிங்கள பேரினவாத அரசின் போரால் இன்றுவரை 146.676 தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர்.ஐநா வின் உள்ளக அறிக்கைப் பிரகாரம் இறுதிப் போரில் மட்டும் 70 000 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இன்றும் சிங்கள பேரினவாத அரசு உலகை ஏமாற்றும் சமநேரத்தில் தாயகத்தில் தமிழ் மக்கள் கட்டமைப்புசார் இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.பெண்கள் மீதான பாலியல் வன்முறை , காணாமல் போகச் செய்தல், கருக்கலைப்பு , திட்டமிட்ட தமிழர் கலாச்சார சீரழிப்பு ,நிலப்பறிப்பு ,தமிழர் இயற்கை வளங்களை சுரண்டல், திட்டமிட்ட போதை மருந்து விநியோகம், சிறுவர் மீதான பாலியல் வன்புணர்வு என பல்வேறு வழிகளிலும் ஈழத்தமிழர்களை அழிக்கும் முயற்சியில் சிங்கள அரசு முனைகின்றது.தமிழர் தாயகத்தில் என்றும் இல்லாதவாறு சிங்கள ராணுவம் நிலைகொண்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் அன்று கொடூரமாக கொல்லப்படும் பொழுது ஏன் இந்த சர்வதேச சமூகத்தால் தமிழர்களின் ஆற்றொணா அழுகைக் குரல் கேட்கப்படாமல் இருந்தது?? இந்த கேள்வி இன்றும் எம் மனங்களில் எழுந்துகொண்டேயிருகின்றது .இந்த கேள்விக்கு இன்றும் எமக்கு பதில் கிடைக்கவில்லை.ஈழத்தமிழர்களுக்கு நடந்தது ஒரு இன அழிப்பு என்று அங்கீகரிக்கவும் அதன் ஊடாக எமக்கான பரிகார நீதியை பெற்றுக்கொள்ளவும் நாம் இன்று 21 ஆம் நூற்றாண்டில் இந்த சர்வதேச சமூகத்திடம் வேண்டி நிற்கின்றோம்.ஈழத்தமிழர்களின் இருப்பு என்பது அவர்களுக்கான ஒரு இறைமை கொண்ட தனியரசின் கீழ் மட்டுமே பாதுகாக்கப்படும் என்பதை என்றாவது ஒருநாள் இந்த சர்வதேசம் நிச்சம் விளங்கிக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தும் போராடுவோமாக.