உழைப்பாளர் தினத்தில் ஏழாலை இளைஞர்களின் உயிர்காக்கும் பணி

323 0

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழாலை இந்து இளைஞர் சபையினரின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(01) ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இன்று காலை-09 மணி முதல் பிற்பகல்- 01 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் பெரும்பாலான இளைஞர்களுடன், இளம் குடும்பப் பெண்மணி ஒருவர், இளம் குடும்பஸ்தரொருவர் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் வைத்தியர் ரி.ஜெயதர்சன், இரத்த வங்கிப் பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தர் கே.சிவநேசன் உள்ளிட்ட வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தங்கராஜா ரவினதாஸ் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

குறித்த இரத்ததான முகாம் தொடர்பில் ஏழாலை இந்து இளைஞர் சபையின் நீண்டகால உறுப்பினரும், பூநகரி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான கந்தசாமி பிருந்தாபன் எமது செய்திச் சேவைக்கு விசேடமாக கருத்துத் தெரிவிக்கையில்,

ஏழாலை இந்து இளைஞர் சபையானது 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான ஆலயங்களான ஏழாலை சிவன், அம்மன், பிள்ளையார், முருகன் ஆகிய நான்கு ஆலயங்களிலும் சரியைத் தொண்டுகள் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

கடந்த-2013 ஆம் ஆண்டு முதல் வருடம் தோறும் மே முதலாம் திகதி உழைப்பாளர் தினத்தன்று இரத்ததான முகாம் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றோம்.

இந்த வருடமும் கொரோனாத் தாக்கமிருந்தாலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இரத்ததான முகாமை நடாத்தியுள்ளோம்.

எமது இந்து இளைஞர் சபையானது சமூகப் பணிகளுடன் மாத்திரமன்றி சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேற்படி நான்கு ஆலயங்களுக்கும் சமூகப் பணிகளுடன் அன்னதானப் பணி, தாகசாந்திப் பணிகளையும் செய்து வருவதுடன் சமூகப் பணிகளில் ஒன்றான இரத்ததானப் பணியையும் நாங்கள் சிறப்பாகச் செய்து வருகின்றோம்.

இதனைவிடக் கடந்த வருடம் கொரோனாத் தாக்கம் ஏற்பட்ட போது வறிய குடும்பங்களுக்கு நாங்கள் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளோம். அந்தவகையில் தொடர்ச்சியாக எங்கள் இந்து இளைஞர் சபை சமயப் பணிகளையும், சமூகப் பணிகளையும் ஆற்றும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏழாலை இந்து இளைஞர் சபையின் தற்போதைய தலைவர் சிவபாதம் நிரூஜன் கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாங்கள் இன்றைய இரத்ததானமுகாம் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம். கடந்த-2013 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வருடா வருடம் உழைப்பாளர் தினத்தில் இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றோம்.

அந்தவகையில் இன்றைய தினம் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கிய குருதிக் கொடையாளர்களுக்கும், நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்ட தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் எனவும் தெரிவித்தார்.

ஏழாலை இந்து இளைஞர் சபை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டுக் கடந்த-2020 ஆம் ஆண்டிலும் இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஏழாலையைச் சேர்ந்த 36 வரையான இளைஞர்கள் ஊரடங்கு வேளையிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

இதேவேளை, ஏழாலை இந்து இளைஞர் சபையினர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்த வருடம் ஒன்பதாவது தடவையாகவும் இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியிருப்பது முன்மாதிரியான செயற்பாடென ஊர்ப் பெரியவர்கள் பலரும் பாராட்டியுள்ளதுடன், சமயப் பணிகளுடன் அவர்களின் சமூகப் பணிகளும் தொடரவும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.