ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்

297 0

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் ஒருவர் தடியால் அடித்த சம்பவத்தில் மாணவனின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தனக்கு வணக்கம் சொல்லவில்லையெனக் கூறியே ஆசிரியர் அடித்துள்ள நிலையில், கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை மறைப்பதற்கு பாடசாலை நிர்வாகத்தினர் மேற்கொண்ட செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கணவனிடம் இருந்து பிரிந்துள்ள நிலையில் ஊர்காவற்துறையில் வசிக்கும் பெண்ணொருவர், இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், தனது பிள்ளையை  ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையில் மாணவர் விடுதியில் தங்கிக் கல்வி கற்பதற்குச் சேர்த்துள்ளார்.

குறித்த மாணவன் கல்வியில் சிறந்து காணப்படுவதுடன் வகுப்பின் மாணவத் தலைவனாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி ஆங்கில பாடத்தைக் கற்பிப்பதற்காக வகுப்பறைக்குச் சென்றிருந்த ஆசிரியைக் கண்டதும் மாணவன், காலை வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்துள்ளார்.

எனினும், அதனை அவதானிக்காத ஆசிரியை, காலை வணக்கம் ஏன் சொல்லவில்லை எனக்கேட்டு தடியினால் அடித்தபோது தவறுதலாக மாணவனின் கண்ணில் பட்டுள்ளது. இதையடுத்து, மாணவன் அழுதபோது கற்றலுக்குத் தொந்தரவு செய்யவேண்டாமென மாணவனை எச்சரித்துள்ளார்.

அத்துடன், குறித்த ஆசிரியையின் கற்றல் செயற்பாடு நிறைவடைந்த பின்பும் மாணவன் வேதனையால் தொடர்ச்சியாக அழுத நிலையில் வகுப்பாசிரியருக்கு ஏனைய மாணவர்களினால் தெரியப்படுத்தப்பட்டதுடன் வகுப்பாசிரியர் மாணவனை அழைத்துச் சென்று தண்ணீரினால் கண்களைக் கழுவி விட்டுள்ளார்.

அதன்பின்னரும், மாணவனுக்கு கண்ணில் வலி தொடர்ந்துள்ள நிலையில், பாடசாலை நிறைவடைந்ததும் ஏனைய மாணவர்கள் விடுதிப் பொறுப்பாளரும் பாடசாலை அதிபருமான பாதிரியாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த மாணவனை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறும் வைத்தியர்கள் கேட்டால் விளையாடும்போது கண்ணில் பட்டதாகக் கூறுமாறும்  சொல்லி ஏனைய மாணவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்போது மாணவனுக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் கண்ணுக்குள் இருந்து சிறு தடித் துண்டினை எடுத்துள்ளார். இதுதொடர்பாக மாணவனிடம் வைத்தியர் கேட்டபோது, விளையாடும் போது தடி பட்டதாகவே மாணலன் கூறியுள்ளார்.

இதன்பின்னர், பிரச்சினையை அறிந்த மாணவனின் தாயார், மறுநாள் பாடசாலைக்குச் சென்று மகனைச் சந்தித்து விபரங்களைக் கேட்டதுடன் பாடசாலை அதிபரை சந்திக்க பல மணிநேரம் காத்திருந்தார்.

அத்துடன், விடயத்தை அறிந்ந சில ஆசிரியர்கள் மதியம் 1.30 மணியளவில் அதிபர் அறைக்குப் பக்கத்திலுள்ள அறைக்குள் தாயாரை அழைத்துச் சென்று  சமாதானம் பேசியுள்ளனர்.

மேலும், மாணவனை வேறு பாடசாலையில் கல்வி கற்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம் எனவும்  இந்தப் பாடசாலையில்தான் தொடர்ந்து கல்வி கற்கவேண்டும் என்றும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.

இதன்போது, தனது பிள்ளை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக தனக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை என்றுத் தாயார் கேட்டதுடன் விடுதிப் பொறுப்பாளரான பாடசாலை அதிபரைச்  சந்தித்துக் கேட்டுவிட்டே செல்வேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிபரை அழைத்துவருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற குறித்த ஆசிரியர்கள் திரும்பிவராத நிலையில் பாடசாலை முடிவடைந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறியதன் பின்னர் மதியம் 2.30 மணியளவில அதிபர் குறித்த மாணவனின் தாயாரைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, குறித்த ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இனி இத்தகையதொரு சம்பவம் நடைபெறாது என்றும் கூறி தாயாரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மாணவனை அதிபர் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதன்பின்னர், மாணவனிடம் விடுதியில் வைத்து, ‘கோத்தைக்கு யாருடா சொன்னது, கொப்பன் ஏன் கோத்தையை விட்டுட்டுப் போனான் என இப்பதான் விளங்குது’ என்று கூறி, ஏனைய மாணவர்கள் முன்னிலையில் மாணவனைத் திட்டி அடித்துள்ளார்.

அதாவது, மாணவனின் உடல் முழுவதும் தழும்பு வரும் வரையில் அவர் அடித்துள்ளார். மேலும், தாயார் கதைத்து விட்டுச்சென்ற ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோருமாறும் மாணவனைப் பணித்துள்ளார். குறித்த பணிப்புரைக்கமைய மறுநாள் மாணவன், குறித்த ஆசிரியர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார் என இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது மாணவன் வைத்தியசாலையில் தாயாரின் பராமரிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.