எம் மக்களை நாடுகடத்துவது பெரும் வலி தரும் நிகழ்வு.-ஈழத்தமிழர் மக்கள் அவை யேர்மனி.

684 0

இலங்கையில் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இனவழிப்பு அரசிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது பிறந்த நாட்டை விட்டு, உறவுகளைப் பிரிந்து  தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தார்கள் எமது உறவுகள். அவர்கள் ஜேர்மனி அரசிடம் அகதி நிலை வாழ்விடக் கோரிக்கையை முன்வைத்துக் காத்திருந்த நிலையில்,  அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறி ஜேர்மனிய அரசு கடந்த 30.03.2021 அன்று இரவு 09.15 மணியளவில் ஜேர்மனியின் டுசுல்டோவ் மாநிலத்தில் அமைந்திருக்கும் சர்வதேச விமானநிலையம் ஊடாக கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கு அனுப்பி இலங்கை அரசிடம் கையளித்துள்ளது.

ஜேர்மனிய அரசின் இந்த நடவடிக்கையானது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ப்தியையும் தந்திருக்கின்றது. ஒருபுறம் கொரோனா என்ற கொடிய நோய்ப் பரம்பல் அதிகரித்துக் காணப்படும் இந்த நிலையில் எம் மக்களை நாடுகடத்துவது என்பது பெரும் வலி தரும் நிகழ்வாகவே நாம் பார்க்கின்றோம். மறுபுறம் இலங்கையை ஆளும் அரசானது மனிதவுரிமைகளுக்கு மதிப்பளிக்காது கொடுமையான இனவழிப்பு நடவடிக்கையை செய்த அரசாகும். இன்றைய பிரதமராக இருக்கும் மகிந்த ராசபக்ச 2009 ஆம் ஆண்டு இலங்கையின் அரசதலைவராக இருந்த போது இன்றைய அரசதலைவரான கோத்தபாய ராசபக்ச பாதுகாப்புச்செயலராக இருந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது நடந்தேற்றிய கொடுமைகள் கொஞ்சமல்ல. ஒரு இனத்தையே இல்லாது அழிக்கும் முழுச் செயற்பாடுகளையும் திட்டமிட்டு அரங்கேற்றினார்கள். வெள்ளைக் கொடியோடு சரண்டைய வந்தமக்களையும் போராளிகளையும் சர்வதேச நீதிநெறிகளை உடைத்தெறிந்து சுட்டுக் கொன்றவர்கள். பெண்கள் குழந்தைகள் என்ற பேதம் இன்றி நிர்வாணப்படுத்தியும் வன்புணர்வு செய்தும் தமிழினத்தின் மீது உச்சக்கட்ட கொடூரங்களை நிகழ்த்தியவர்கள்.

அத்தோடு இந்த கொடுமையான ஆட்சி ஓய்ந்து விடவில்லை. இன்று 12 ஆண்டுகள் கடந்து வந்தும் தமிழர்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டு மனிதவுரிமைகளை சாகடிக்கும் வகையில் திட்டமிட்ட இராணுவ ஆட்சியை நிலைநாட்டி வருகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். இலங்கை இராணுவப்படை வலுவில் 75% இற்கு மேலான படையினரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் எங்கும் நிலைப்படுத்தி உள்ளனர். அதனால் இராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் முழுநேரக் கண்காணிப்பில் தமிழர் பிரதேசங்களை வைத்திருக்கின்றனர். இதன் முடிவு இப்போதும் வலிந்து காணாமல் ஆக்கப்படல், மக்களின் திடீர் மரணங்கள், கைதுகள், அரசியல் பழிவாங்கல்கள் என்றும் ஊடக சுதந்திரத்தை பறித்து ஊடகவியலாளர்களை கைது செய்தல் என தொடர்கதையாகவே தொடர்கின்றது. இதற்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கில்லை. எடுகோலாக யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் திரு. மணிவண்ணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்திருப்பதை குறிப்பிடலாம்.

இந்த நிலையில் தான் அகதி தஞ்சம் கோரி வந்த எமது ஈழத்தமிழ் உறவுகளை ஜேர்மனிய அரசு அவர்களது கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாது, அவர்களை நாடுகடத்தி இனவழிப்பு அரசிடம் ஒப்படைத்துள்ளது. இவ்வாறு அனுப்பப்பட்ட உறவுகளின் நிலை என்ன ஆகும் என்பது எமக்கு ஏக்கமாகவே இருக்கின்றது. அவர்களை இப்போது கொரோனா தனிமைப்படுத்தல் என்ற வகைக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ள இலங்கை அரசு அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுற்றதும், தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போன்ற இராணுவ புலனாய்வுப் பிரிவுகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களின் நிலை இதன் பின் என்னவாகும்? இது விடை தெரியாத ஏக்கம் கலந்த வினா மட்டுமே…!

எமது உறவுகளுக்கு எதுவும் நடக்கலாம் என்ற ஏக்கத்துடன் தான் ஜேர்மனி அரசிடம் ஈழத்தமிழர் மக்களவை மட்டுமல்லாது ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களும் பல இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து ஜேர்மனிய அரசிடம் கோரிக்கைகளை முன் வைத்தோம். இது ஜேர்மனிய அரசால் திட்டமிட்டு அனைத்து பிரதேசங்களிலும் இருந்து பெருவாரியான உறவுகளை கைது செய்த நிகழ்வு. அதனால் அவர்களை மீட்டெடுத்து இனவழிப்பு இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்ற கோரிக்கைகளோடு, எமது உறவுகளை அடைத்து வைத்திருந்த, Baden-württemberg மாநிலத்தின் Pforzheim என்ற இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு முன்பாகவும், மற்றும் Büren என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாகவும் Düsseldorf மாநிலத்தில் உள்ள பாராளுமன்றம் முன்பாகவும் Berlin மாநிலத்தில் உள்ள உட்துறை அமைச்சுக்கு முன்பாகவும் கோரிக்கை போராட்டங்களை நடாத்தினோம்.

இருந்தும் எமது போராட்டங்களுக்கு செவி சாய்க்க மறுத்த ஜேர்மனிய அரசு தனது திட்டத்தை நிறைவேற்ற முனைப்புக் கொண்டிருந்தது. அதனால் ஈழத்தமிழர் மக்களவை மற்றும் இளையோர் அமைப்புடன் இணைந்து பல்லின மக்களும், எமது மக்களும் Düsseldorf விமானநிலையத்தில் பெரும் கோரிக்கைப் போராட்டத்தை முன்னெடுத்தோம். இது மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மத்தியமாநில மற்றும் பாடன்வூட்டன்பேர்க் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சிலர் எமக்கான ஆதரவை வழங்கினார்கள். அவர்களோடு வழக்கறிஞர்கள் மற்றும் அகதிகள் தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் சிலவும் எம்மோடு இணைந்து ஜேர்மனிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.

இதன் அடிப்படையில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் அரசியல் சந்திப்புக்கள்,  பாடன்வூட்டன்பேர்க் மாநிலத்தில் இயங்கக் கூடிய இடதுசாரிகள் கட்சி மற்றும் Bündnis Gürene Party ஆகியவற்றின் அழுத்தம் என்பவை அனைத்தும் எமது உறவுகள் நால்வரை ஜேர்மனிய குடிவரவு குடியகல்வுத் துறையினரை விடுதலை செய்ய வைத்தது. மிகுதியாக இருந்த உறவுகளை ஜேர்மனிய அரசு நாடுகடத்தி இலங்கை அரசிடம் ஒப்படைத்து எமக்கு வேதனையைத் தந்துள்ளது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து நாம் பணியாற்றிய பொழுது எம்மோடு இணைந்து பணியாற்றிய அரசியல் கட்சிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறைவனங்கள், ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் ஆகியவற்றோடு எம் போராட்டங்களில் கலந்து கொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்த பல்லின மக்கள் மற்றும் எமது மக்களின் கரங்களைப் பற்றி
நன்றியுரைக்கின்றோம்.

அத்தோடு “நாடுகடத்தப்படுவதற்கு பதிலாக வதிவிட  உரிமை” எனும் தலைப்பில் அகதிகளின் உரிமைக்காக யேர்மன் அமைப்புகளால்  நாளைய தினம் Baden Württemberg  மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் முன்னெடுக்கும்  பேரணியில் நாமும் கலந்துகொண்டு வலுச்சேர்ப்போம்.மேலதிகமான தகவல்கள் இணைப்பில் உள்ளது.