தமிழ்நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி

266 0

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போடும் பணி தொடங்குவதால் நாட்டில் சுமார் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இவை இரண்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

ஜனவரி மாதம் 16-ந்தேதி முதன் முதலில் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்களுக்கு ஊசி போடப்பட்டது. பிப்ரவரி 2-ந்தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.

மார்ச் 1-ந்தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட் டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன்படி இதுவரை நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாளை (1-ந்தேதி) முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இதற்காக தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவில் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் அந்தந்த மையங்களுக்கு நேரடியாக சென்றே பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போடும் பணி தொடங்குவதால் நாட்டில் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அது முடிந்ததும் மேலும் வயது தளர்வுகள் கொண்டு வரப்படுகின்றன. அப்போது குறைந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக அனைத்து மையங்களுக்கும் போதிய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 2-ந்தேதி கூடுதலாக 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மருந்துகள் சென்னைக்கு வருகின்றன. அவற்றையும் அந்தந்த முகாம்களுக்கு பிரித்து அனுப்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 கோடி பேர் இருக்கிறார்கள். அனைவருக்கும் கண்டிப்பாக தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.