பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளார்.
‘வார்தா’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதத்தை உண்டாக்கியது. இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து தடைபட்டது. மின்சார இணைப்பும், தொலைதொடர்பும் அதிகளவில் பாதிக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதோடு, தொழில்களும் முடங்கின. பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தொழில் அமைப்புகள் கணித்தன. இந்தநிலையில் தமிழகத்துக்கு நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு முதற்கட்டமாக அளிக்க வேண்டும் என்றும், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் அந்த கோரிக்கை மனுவுடன் 18-ந்தேதி (இன்று) டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாயின.இதுகுறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்லும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை’, என்று கூறப்பட்டது.

