சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு தமிழ் தலைவர்களே தடையாக இருக்கிறார்கள்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

405 0

அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாகவும், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களுடைய எதிர்பார்ப்புகளை அடைவதற்கு உள்ள தடைகளை முதலில் நீக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். இந்த விடயங்களில் ஸ்ரீலங்கா அரசு தடையாகவும் எதிராகவும் இருப்பது நாங்கள் எதிர்பார்த்த விடயம். ஆனால், அதனையும் விட மோசமாக எம்மவர்களே தடையாக  இருக்கிறார்கள். விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச குற்றவியல் விசாரணையொன்று நடைபெறுவதற்கு இன்றைக்கும் மிகப் பிரதான ஒரு தடையாக இருக்கின்றது. கடந்த 12 வருடங்களாக இந்த இனத்தினை தொடர்ச்சியாக ஏமாற்றியதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஜெனீவாவில் தற்போதைய கள நிலைவரம் எவ்வாறாக உள்ளது?

உண்மையில் மனித உரிமை உயர்ஸ்தானிகருடைய அறிக்கை வெளிவந்ததற்குப்பிறகு  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நீதி கேட்பதற்கான ஒரு கணிசமான பலமான அத்திவாரம் ஒன்று இடப்பட்டு இருந்தும்கூட, மனித உரிமை பேரவையில் இருக்கக்கூடிய நிலைமையை எடுத்து பார்த்தால், துரதிஸ்டவசமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நம்பியிருந்த ஒரு சில நாடுகள்கூட எங்களை கைவிட்டு ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மனித உரிமை உயர்ஸ்தானிகருடைய  அறிக்கை மிகத் தெளிவாக  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று பதிவு செய்திருந்தும் கூட, இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பான ஒரு புதுத்தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ஆரம்ப வரைபொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த ஆரம்ப வரைபானது, மனித உரிமை உயர்ஸ்தானிகருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை கவனத்தில் எடுக்காத வகையிலேயே அமைந்துள்ளது. தமிழ் மக்களுக்கும் ஏன் முஸ்லிம் மக்களுக்கும் கூட ஏற்பட்டுள்ள மிக ஆபத்தான நிலை, ஜனநாயக விரோதமாக செயற்படுகின்ற இலங்கையினுடைய போக்கு, இராணுவ மயப்படுத்தல் போன்ற கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் தயாரிக்கப்பட்ட ஒரு முன் வரைபாகத்தான் இருக்கின்றது. மீண்டும் பொறுப்புக்கூறலை ஒரு பயனும் இல்லாத, ஒரு அதிகாரமும் இல்லாத, தண்டிக்கக் கூடிய எந்த விதமான அதிகாரமும் இல்லாத வகையில், மனித உரிமைப் பேரவையில் தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை  முடக்கி வைத்திருக்கும் வகையில் தான், அந்த தீர்மானத்தின் முதலாவது வரைபு அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் அந்த முதலாவது வரைபு இறுதிவரைபாக மாறுவதற்கு முன்னர் எங்களுடைய பலத்த ஆட்சேபனைகளையும் கணிசமான வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்யாதுவிட்டால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை இழந்ததாக மாறிவிடும். எம்மைப் பொறுத்தவரையில், இந்த கடும் ஏமாற்றத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மிகப்பெரிய பங்காளியாக செயற்படுகின்றது. அவர்கள் இந்த பலவீனமான முன்வரைபை வரவேற்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் நாங்கள் இந்த முன்வரைபை விட ஒரு மிகப் பலமான மாற்றங்களை கொண்டு வரக்கூடிய வகையிலே இணைத்தலைமை நாடுகளோ அல்லது மனித உரிமைப் பேரவையில் இருக்கக்கூடிய உறுப்பு  நாடுகளோ எதிர்காலத்தில் செயற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்த முறை ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள உத்தேச வரைவு தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில் இந்த வரைபை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இந்த முன்வரைபு பொறுப்புக்கூறலை பேரவைக்குள் தொடர்ந்தும் முடக்கி வைத்திருப்பதுடன் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கால அவகாசத்தை கொடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. நாங்கள் முதலாவது உத்தேச வரைபினை படித்ததன் பின்னதாக, அவசரமாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி கோ குரூப் நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி இருக்கின்றோம். அதேபோன்று அந்த கடிதத்தின் இன்னொரு நகலை மனித உரிமைப் பேரவையில் இருக்கக்கூடிய உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி இருக்கின்றோம். அந்த கடிதத்தில் நாங்கள் பலவிதமான விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றோம். முக்கியமாக முன்வரைபினுடைய  அத்திவாரம்  அல்லது அடிப்படை சிந்தனையே பிழையாக இருக்கின்றது என்ற  விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். எமக்கிருந்த காலவரையறையைக் கருத்திற்கொண்டு, எங்களுக்கு மிக முக்கியமாக கருதுகின்ற விடயங்களை மட்டும் இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம் என்று கூறி, முதலாவதாக மனித உரிமைப் பேரவையில் இருந்து பொறுப்புக்கூறலினை வெளியிலெடுத்து   சர்வதேச குற்றவியல் விசாரணைக்குரிய தளங்களை உருவாக்குவதுதான் பாதிக்கப்பட்ட மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

சீனா, ரஸ்யா போன்ற பாதுகாப்பு சபையினுடைய நிரந்தர உறுப்பு நாடுகள் தங்களுடைய வீட்டோ அதிகாரத்தினை பயன்படுத்தி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை தனியே நின்று முறியடிக்கலாம் என்று சொல்லக்கூடிய கருத்தையும் தாண்டி, சிரியாவை உதாரணமாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றோம். சிரியாவில் இந்த இரண்டு நாடுகளும் தங்களுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை தோற்கடித்திருந்தாலும் கூட, சிரிய விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குத்தான் கொண்டு போக வேண்டும் என்ற அடிப்படையில், கிட்டத்தட்ட பதினான்கு தடவைகளுக்கு மேலாக அவர்கள் தொடர்ச்சியாக முயற்சி எடுத்தார்கள்.

இவ்வாறு அந்த முயற்சியினை எடுப்பதே அரசாங்கத்திற்கும், அதன் ஆதரவு சக்திகளுக்கும் கடும் அழுத்தமாகும். அப்படிப்பட்ட ஒரு பாரதூரமான குற்றங்களைச் செய்த நாடாக தொடர்ச்சியாக சர்வதேச அரங்கில் ஒரு நாடு அம்பலப்படுத்தபடுகின்ற இடத்தில் அதிக விளைவுகளும் தடைகளும் இருக்கும். இந்த நாட்டில் இருக்கக்கூடிய தலைவர்களுக்கும் இராணுவ தளபதிகளுக்கும் போக்குவரத்து தடைகள், பொருளாதார ரீதியாக வெளிநாடுகளில் வங்கி கணக்குகளை திறக்க முடியாத நிலைமைகள் போன்ற பல தடைகள் கூட ஏற்படும். உத்தியோகபூர்வமான தடைகள் இல்லாவிட்டாலும் கூட, இப்படிப்பட்ட குற்றஞ்சாட்டப்படுகின்ற  நாட்டில்,  அங்குள்ள அரசியல் தலைவர்களும்  அதனுடைய இராணுவ தரப்பினரும்  மற்றைய நாடுகளுக்கு பயணிக்க முடியாத நிலைமைகள் இருக்கும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு சபை ஊடாக கொண்டு செல்லாமல் வேறு வழிகள் ஊடாகவும் கொண்டு செல்லமுடியும். இவ்வாறான விடயங்களையும் நாம் சுட்டிக் காட்டி இருக்கின்றோம். அந்த வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற விடயத்தை கட்டாயம் நீங்கள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். இரண்டாவது, காணாமல் ஆக்கப்பட்டோருடைய அலுவலகம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட குறித்த முன்வரைபு புகழ்ந்து இருக்கின்றது.

ஆனால் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துக்கள் எதனையும் கேட்காமல்தான் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அடிப்படையில் அது ஒரு தவறான அலுவலகம். காணாமல் ஆக்கப்பட்டிருக்கக் கூடியவர்கள் சம்பந்தமான மிக முக்கியமான கோரிக்கைகள் எதனையும் நிறைவேற்ற முடியாத வகையிலேயே அந்த அலுவலகம் கொண்டுவரப்பட்டது. அது வெறுமனே ஒரு கண்துடைப்பிற்காக கொண்டுவரப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே அதனை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தனர். யதார்த்தம் அப்படி இருக்க, இந்த முன் வரைபில் அதனை ஒரு முன்னேற்றகரமான விடயமாக காட்ட முயற்சித்திருப்பதனையும் நாங்கள் கண்டித்து சுட்டிக்காட்டியிருக்கின்றோம். முக்கியமாக அரசியல் தீர்வு என்ற விடயம் சம்பந்தமாக அவர்கள் பொருத்தம் இல்லாத கருத்தினை தெரிவித்திருக்கின்றார்கள். விசேடமாக 13ஆம் திருத்தத்தினை அமுல்படுத்துவதன் ஊடாக ஒரு அரசியல் தீர்வினை இங்கு எட்டலாம், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற ஒரு மிகவும் தவறான கருத்தினை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த 13ஆம் திருத்தத்தை நாங்கள் ஒரு ஆரம்ப புள்ளியாக கூட ஏற்க முடியாது என்பது 1987 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரைக்கும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புமில்லாமல் தமிழ்மக்களால் முன்வைக்கப்படுகின்ற அடிப்படைக் கோரிக்கையாக இருக்கின்றது.  13ஆம் திருத்தத்தை நாங்கள் ஒரு ஆரம்ப புள்ளியாக கூட பார்க்காத நிலையில், தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற, இலங்கை ஒரு பல்தேசிய நாடாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.  தமிழ், சிங்கள தேசங்கள் தங்களுடைய தனித்துவமான இறைமைகளின் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை தனித்தனியாக முழுமையாக அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த நாட்டினுடைய அரசியலமைப்பு புதிதாக கொண்டுவரப்பட வேண்டும் என்ற விடயத்தினையும்  நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

தமிழ் மக்களுடைய அடுத்தகட்டமான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்?

முதல்கட்டமாக, எங்களுடைய எதிர்பார்ப்புகள், விசேடமாக அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாகவும், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களுடைய எதிர்பார்ப்புகளை அடைவதற்கு உள்ள தடைகளை முதலில் நீக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். இந்த விடயங்களில் ஸ்ரீலங்கா அரசு தடையாகவும் எதிராகவும் இருப்பது நாங்கள் எதிர்பார்த்த விடயம். ஆனால், அதனையும் விட மோசமாக எம்மவர்களே தடையாக  இருக்கிறார்கள். விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச குற்றவியல் விசாரணையொன்று நடைபெறுவதற்கு இன்றைக்கும் மிகப் பிரதான ஒரு தடையாக இருக்கின்றது. கடந்த 12 வருடங்களாக இந்த இனத்தினை தொடர்ச்சியாக ஏமாற்றியதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

அவர்கள்தான் கடந்த காலங்களில் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றார்கள். இப்பொழுது ஒரு உள்ளக பொறிமுறை மட்டும் தான் தேவை. அதைத்தான் நடைமுறைப்படுத்த வைக்க வேண்டும் என்று கூறினார்கள். அதனை நாங்கள் மக்கள் மட்டத்தில் அம்பலப்படுத்தியிருந்தோம். கூட்டமைப்பும் தேர்தலில் பலத்த பின்னடைவுகளையும் கண்டிருந்த நிலையில், அவர்கள் தவிர்க்க முடியாமல் எங்களோடு இணைந்து, மூன்று கட்சிகளும் சேர்ந்து அனுப்பிய ஒரு கடிதத்திற்கு, தங்களுடைய கையொப்பத்தை வைக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்தக் கடிதத்தில் மிகத்தெளிவாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்காவைக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர்கள் இணங்க வேண்டி வந்தது.

தாங்கள் பத்து வருடமாக எடுத்த முயற்சிகள் படுதோல்வி அடைந்திருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தது. இதன்மூலம், ஏதோ ஒரு வகையில் தாங்கள் நேர்மையாக நடந்து கொண்டதைப் போன்றும், இனத்தை காட்டிக் கொடுக்காமல் நேர்மையாக நடந்து கொண்டதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிவடைந்ததாகவும் காட்டி, தாங்கள் நல்ல பிள்ளைக்கு நடித்து, அதையாவது அவர்கள் ஒத்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்.  அப்படி இருந்தும்கூட, அந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டு, அந்த மை காய்வதற்கு முன்பாகவே அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது இயலாது, அது சாத்தியமில்லை, அதனை நம்ப வேண்டாம், என்று கூறித்திரிந்தார்கள்.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடைய அறிக்கை பலமானதாக இருந்தாலும்கூட, அது பெரிய அளவில் தாக்கம் செலுத்தாது என்று அவர்களாகவே மக்கள் மட்டத்தில் ஒரு சோர்வு மனப்பான்மையை உருவாக்கி, தமிழ்மக்களுடைய உரிமைக்காக போராடும் அந்த தன்மையினை இல்லாமல் செய்வதற்குத்தான் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பலமான கடிதமொன்றை அந்த உறுப்பு நாடுகளுக்கு எழுதியதற்குப்பிறகு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு இரகசியமாகவும் தன்னிச்சையாகவும் சென்று, இந்த நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்ததன் விளைவாகத்தான், இந்த மிகப் பலவீனமான ஆரம்பகட்ட உத்தேச  வரைபு வெளிவந்திருக்கிறது.

சிவில் சமூகமாக இருக்கலாம் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளாக இருக்கலாம் அனைவரும் அந்த வரைபைக் கண்டித்து, தமது கடும் ஏமாற்றத்தைச் சுட்டிக்காட்டி வருகின்ற இந்த நிலைமையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அந்த முன்வரைபை ஒரு வரவேற்கத்தக்க விடயமாக தங்களுடைய உத்தியோகபூர்வ பேச்சாளரின் ஊடாக பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, இந்த மாதிரியான எம்மவர் மட்டத்திலேயே இருக்கக்கூடிய மிகப்பெரிய தடைகளை நாங்கள் நீக்காமல் இருக்கும் வரைக்கும், நாங்கள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருக்கும்.  ஏனென்றால், வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை பத்து உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

ஆகவே, அந்த பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் கருத்து பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கின்றதென்றால், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாங்கள் அதைத்தாண்டிப் பயணிப்பது மிகவும் சவாலானது. ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக சிங்களத் தரப்பையும் சர்வதேச தரப்பையும் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் இல்லை. நாங்கள் முதலில்  தமிழ்த்தரப்பாக செய்ய கூடிய விடயங்களை சரியாக செய்கின்றோமா? என்று சுய விமர்சனங்களை செய்து, நாங்கள் எங்களுடைய முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வராமல் நாங்கள் பெரிய அளவில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் மீது எவ்வாறானதொரு தாக்கத்தைச் செலுத்தும்?

தற்போதைய அரசாங்கத்தினுடைய செயற்பாட்டை சரியான பின்னணியில் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். கடந்த எழுபத்து மூன்று வருடங்களாக, ஸ்ரீலங்காவில் மாறி வந்த ஒவ்வொரு அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளையும் கூட்டாக நாங்கள் பார்ப்பதனூடாக நாங்கள் விளங்கிக் கொள்ள முடியும். ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கங்கள் ஒரு சிங்கள பௌத்த தேசியவாதத்தை கடைபிடிக்கும் வகையில் செயற்பாடுகளை நடத்தினார்கள்.  அந்த தேசியவாதம் காலப்போக்கில் ஒரு பேரினவாதமாக மாறியது. விசேடமாக சிங்கள பௌத்தர்களுடைய நிகழ்ச்சி நிரலை திணிக்கின்ற நிலமை மாறி, ஏனைய தேசங்களுக்கெதிராக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அந்த நடவடிக்கைகள் மிக முக்கியமாக தமிழ் தேசத்திற்கு எதிரான நடவடிக்கையாக மாறியது. தமிழ் தேசத்தை குறிவைத்து அழிப்பதற்காகவும் நாங்கள் வடகிழக்கில் ஒரு தேசமாக இயங்குகின்ற நிலமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டு, அந்த செயற்பாடு உச்சமடைந்து அது இனவழிப்பில் முடிந்தது. தமிழ்த்தேசிய இனவழிப்பிற்கு பிறகு, மே 2009 இற்குப் பிறகு தமிழ் இனவழிப்பு என்ற நிகழ்ச்சி நிரல் மாறி, போர்க்காலத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கங்களை ஆதரித்த, தமிழ் மக்களுடைய பக்கம் எடுக்காத, குறைந்தது நடுநிலைமையாவது வகித்த,  முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது. போர்காலத்தில் தங்களுடனேயே நின்ற, தங்களுக்கு எதிராக நிற்காமல் தமிழ் மக்களுடைய தமிழ் தேசம் என்கின்ற வகையில் தமிழ் மக்களுடன் இருக்காத முஸ்லிம் மக்களையே இன்று குறிவைக்கிறார்களென்றால், அது இனவாதமே அன்றி வேறொன்றுமில்லை. அந்த இனவாதம் உச்சமடைந்து இருக்கிறது.

அது இனவாதத்தை தாண்டியதொரு உச்சநிலையை இன்று ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கம் இராணுவ மயப்படுத்தல் மூலமாக தமிழ் மக்களையும், தமிழர் பிரதேசங்களையும் அடக்கி ஒடுக்குவதற்காக,  வடகிழக்கில் பல தசாப்தங்களாக நிலைகொண்டிருந்தனர். ஆனால், இன்று தென்னிலங்கையில் கூட இந்த இராணுவ மயப்படுத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிர்வாகத்திலும் இராணுவ மயப்படுத்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. சிவில் நிர்வாகக் கட்டமைப்பு இருக்கக்கூடியதாக, அதற்கு பரவலாக இராணுவ நிர்வாகம் ஒன்றை அவர்கள் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாஸி ஜேர்மனியுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய அளவிற்கு,  ஹிட்லருடைய அந்த காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய அளவில் காய்நகர்த்தல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது கேள்வி என்னவென்றால், இந்த இராணுவ மயப்படுத்தல்கள் எதற்காக? எங்களைப் பொறுத்தமட்டில் இந்த அரசாங்கம் எடுக்கின்ற முடிவுகள் அனைத்தையும் பார்க்கின்ற பொழுது உண்மையில் இனவாதத்தையும் தாண்டி இன்றைக்கு பாசிச வாதத்தினுடைய ஆரம்ப கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பதைத்தான் நாங்கள் கூறுகின்றோம்.

பூகோளவியல் அரசியல் போக்கின் மத்தியில் தமிழ் மக்களது அரசியலை எவ்வாறு எடுத்துச் செல்லவேண்டும் என கருதுகிறீர்கள்?

முதலாவதாக இந்த பூகோள அரசியல் தான் இலங்கைத் தீவு சம்பந்தப்பட்ட விடயங்களில் சர்வதேச அரங்கிலே தாக்கம் செலுத்துகின்றது என்கின்ற விடயம் இன்றைக்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எங்களுடைய மக்களே இன்று பேசக்கூடிய அளவிற்கு அந்த விடயம் வந்துவிட்டது என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரையில் ஒரு ஆறுதலான விடயமாகும். ஏனென்றால், நாங்கள் இந்த பூகோள அரசியல் சம்பந்தமாக 2009 மே மாதத்திற்கு பிறகு எட்டு மாதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் கதைத்தும், கூட்டமைப்பினுடைய தலைமைத்துவம் அதை முற்றுமுழுதாக நிராகரித்து, எங்களைக் கேவலப்படுத்தி, இந்த பூகோள அரசியல் சம்பந்தமாக எடுக்கப்பட கூடிய முடிவுகளை உதாசீனம் செய்திருந்த நிலையில், அவர்கள் கொள்கை அளவில் கூட விளங்கிக் கொள்ளாமல், இந்தியா விரும்பிய 13ஆம் திருத்தத்தைத்தான் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியமையால்தான், நாங்கள் உண்மையில் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

வெளியேறியதற்குப்பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாங்கள் பூகோள அரசியலைத்தான் வலியுறுத்திக் கொண்டுவந்தோம். அந்தவகையில், இன்றைக்கு இந்த “பூகோள அரசியல்” என்ற வார்த்தை கூட, இலங்கை தொடர்பான சர்வதேச அரசியலில்  தவிர்க்கமுடியாத ஒரு பேசுபொருளாக வந்திருப்பதென்பது, உண்மையில் நாங்கள் 12 வருடமாக எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

இரண்டாவதாக பூகோள அரசியலை நாங்கள் பயன்படுத்தி முன் செல்வதற்கு முதலில் எங்களுக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும். பூகோள அரசியலிலே தமிழர்களை ஒரு கருவியாக, ஒரு சில வல்லரசுகள் தங்களுடைய தேவைக்காக பயன்படுத்துவதற்கு உத்தேசிப்பது தான் பூகோள அரசியலுடைய ஒரு முக்கிய விடயமாக இலங்கைதீவில் காணப்படுகின்றது. சீனா சார்ந்த ஒரு நாடாக இலங்கை மாறி வருகின்ற நிலையில், இலங்கைக்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பதனூடாக, சீனாவிடம் இருந்து விடுபட்டு தங்களுடைய சார்பில் வருவதற்கு மேற்கு நாடுகளும் இந்தியாவும் தமிழ் மக்களைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

தமிழ் மக்களுடைய இனவழிப்பை, அந்த இனவழிப்பிற்கான பொறுப்புக்கூறலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான தீர்வு ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்கின்ற வகையில், ஒரு அரசியல் தீர்வு அவசியம் என்கிற விடயத்தையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், உண்மையில் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்ற சர்வதேச குற்றவியல் விசாரணையையோ அல்லது உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்ற வகையில், ஒரு தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற சம~;டி தீர்வையோ இந்த நாடுகள் வலியுறுத்தத் தயாராக இல்லை. அவர்கள் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மட்டும் பேச்சளவில் எங்களுடைய விடயங்களை பாவிக்கின்றார்களே தவிர,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையில்  தீர்வினைக் கொடுக்கின்ற கோணத்தில் அவர்கள் இதுவரைக்கும் செயற்படவில்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுடைய அனுமதியோடுதான் தாங்கள் அனைத்தையும் கையாளுவதாகக் கூறி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 12 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்ணை மூடிக்கொண்டு இந்த வல்லரசுகள் விரும்பிய நிகழ்ச்சி நிரலுக்கு தலையாட்டுவதற்கு தயாராக இருந்ததனால், அதை அவர்கள் தொடர்ந்தும் செய்து வரக்கூடியதாக இருந்தது. இன்றும் அதனையே செய்ய முயல்கின்றனர். ஆகவே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் இறுக்கமாகவும் உறுதியாகவும் நின்று அதில் விட்டுக் கொடுப்புக்களின்றி நிற்கின்றபோதுதான், இந்த வல்லரசுகள் எங்களுடன் பேரம்பேசும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். பேரம் பேசுவதனூடாக மட்டும்தான் நாங்கள் எங்களுடைய நலன்களை அடையக்கூடிய வகையில் இந்த சர்வதேச அரசியலை கையாளலாம்.

கடந்த ஜெனீவா அமர்வுகளில் இந்தியா நடுநிலைமை வகித்தும் இலங்கைக்கு ஆதரவாகவும் செயற்பட்ட நிலையில் இம்முறை கூட்டத் தொடரில்  எவ்வாறான  நிலைப்பாட்டை எடுக்கும் எனக் கருதுகிறீர்கள்?

அதனை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மகிந்த ராஜபக்ச இருந்த காலத்தில் இந்தியா நடுநிலைமை வகித்தது. ராஜபக்ச அரசு சீனா சார்ந்த ஒரு நிலைப்பாட்டை கொண்டிருந்த காலகட்டத்தில், அந்தத் தீர்மானம் ராஜபக்ச அரசுக்கு ஒரு நெருக்கடியை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதால், ஸ்ரீலங்கா அரசாங்கம் சார்பாக, அதனை எதிர்க்க அவர்கள் விரும்பவில்லை. அந்த வகையில் அவர்கள் நடுநிலைமை வகித்தனர். 2015 இல் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கமே ஒரு இந்திய மேற்கு சார்ந்த பின்னணியிலிருந்து ஆட்சிக்கு வந்திருந்த நிலையில், அந்த அரசாங்கம் ஜெனிவாவில் இணை அனுசரணை வழங்குவதற்கு முன்வந்த இடத்தில் இந்தியா அந்த தீர்மானங்களை ஆதரித்தது. இன்றைக்கு திரும்பவும் ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்திருக்கிறது. பல விடயங்களில் இந்தியாவிற்கு கடும் சவாலாகத்தான் இந்த அரசாங்கம் இந்த ஒருவருடத்திற்குள் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

அதேசமயம் இந்தியாவுடன் பேரம்பேசி, அவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக, சில வேளைகளில் ஒரு சில வாக்குறுதிகளைக்கூட கொடுத்து, இந்தியாவினுடைய ஆதரவை பெற முயற்சிப்பர். குறைந்தபட்சம் எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கு முயற்சிப்பார்கள். இந்தியா அப்படிப்பட்ட உறுதியற்ற வாக்குறுதிகளை நம்பி, தன்னுடைய நீண்டகால நலன்களை மீறுகின்ற வகையில் அந்த தீர்மானத்தை வலுப்படுத்தி,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை கொடுக்கக்கூடிய வகையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கும் வரையில், இறுதியில் இந்தியாவே பாதிக்கப்படும்.

தமிழ் கட்சிகளின் கூட்டு நிலைமை என்ன?

கூட்டு அவசியப்படுவது எதற்காக? ஒற்றுமையாக நாங்கள் ஒரு காத்திரமான  நிலைப்பாட்டை எடுத்து, தமிழ் மக்களுக்கான விமோசனத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே ஒற்றுமையான ஒரு கூட்டுத்தேவை. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கூட, அனைத்து தரப்புக்களும் ஒன்றாக போராடுகிறார்கள் என்ற நம்பிக்கையில், பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரைக்கும் கிட்டத்தட்ட இலட்சத்திற்கு மேலான மக்கள், நேரடியான பலத்த சவால்களுக்கு இடையிலும் அச்சுறுத்தல்களின் மத்தியிலும், அவை எல்லாவற்றையும் தாண்டி அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அந்தப் போராட்டம் முடிவடைவதற்கு முதலே அந்த மக்களுடைய உண்மையான நோக்கங்கள், எதிர்பார்ப்புக்களை போட்டடித்து உடைக்கின்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது.

அந்த போராட்டத்தினுடைய உண்மையான கோரிக்கைகளை  கொச்சைப்படுத்துகின்ற வகையிலும், அதன் நோக்கங்களை திசை திருப்புகின்ற வகையிலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மூடிமறைத்து, வடகிழக்கு என்பது தமிழருக்கும் தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை நிராகரித்து, தமிழர்கள் தாங்கள் ஒரு தேசம் என்ற அடையாளத்துடன் இருக்கின்றதனால் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்ற கோட்பாட்டையும் கொச்சைப்படுத்தி அந்த நோக்கத்தையே  அழிக்கின்ற வகையிலேயே அவர்கள் செயற்பட்டிருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல்  குழப்பத்தை ஏற்படுத்தி, அடிப்படைக் கோட்பாடுகள் நான்கையும் தவிர்த்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய உத்தியோகபூர்வமான பேச்சாளர் சுமந்திரன், இந்த ஜெனிவா அமர்விலே இலங்கை தொடர்பான தீர்மானங்களை கொண்டு வரக்கூடிய இணை அனுசரணை  நாடுகளை சந்தித்து, அந்தக் கோட்பாடுகளை முற்றுமுழுதாக திசை திருப்புகின்ற வகையிலே அவர்களிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதனால்தான்,  முன்வரைபு மிகவும் பலவீனமான ஒரு விடயமாக வெளிவந்துள்ளது. 2012 இல் இருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள் இந்த இணை அனுசரணை நாடுகளினால் கொண்டு வரப்படுகின்றன. அந்த அனைத்து தீர்மானங்களையும் விட மிகப் பலவீனமான தீர்மானமாகத்தான் இப்போதைக்கு உத்தேசித்திருக்கின்ற இந்த தீர்மானம், முன்வரைபு அமைந்துள்ளது. அந்த மிகப் பலவீனமான தீர்மானத்தையே ஆதரிக்கின்ற அளவுக்குத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு அமைந்துள்ளது.

தமிழ் மக்களுடைய அபிலாசைகளை முற்றுமுழுதாகக் குழி தோண்டிப் புதைக்கின்ற வகையிலே கடந்த 12 வருடங்களாக செயற்பட்டமை போதாதென்று, தொடர்ந்தும் கூட்டமைப்பு எங்களுடன் சேர்ந்து பயணிப்பதாக காண்பித்து,  நல்ல பிள்ளைக்கு நடித்து உரிய நேரத்தில் இனத்தை காட்டிக் கொடுக்கின்ற விதமாகவே செயற்படுகின்றது. அவ்வகையான ஒருதரப்போடு எப்படி நாங்கள் கூட்டு சேரலாம்? திரு.விக்னேஸ்வரன் அவர்களை எடுத்துக்கொண்டாலும் கூட, கூட்டமைப்பினுடைய அளவுக்கு அவர்கள் மோசமாக செயற்படாது விட்டாலும் கூட, தமிழ் மக்களினுடைய தீர்வு என்ற விடயத்தில் 13ஆம் திருத்தத்தை தாண்டி செயற்பட அவர் தயாராக இல்லை. 1987 ஆம் ஆண்டே நிராகரித்த ஒரு விடயத்தை இன்றைக்கும் நிராகரிக்க முடியாமல், இந்தியா விரும்பிய படி அவர் அதற்கு முழுமையாக இணங்கிப் பயணிக்கின்றார்.

ஆகவே, பொறுப்புக் கூறலும் அரசியல் தீர்வும் தான் தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான விடயங்களாக இருக்கின்றது. இந்த இரண்டு விடயங்களிலும் இந்தத் தரப்புகள் மோசமாக ஏமாற்றுகின்ற வகையில் அவர்களுடைய செயற்பாடுகள் இருக்கின்ற பட்சத்தில், நாங்கள் எவ்வாறு சேர்ந்து பயணிப்பது? என்பதற்கு கேள்வி கேட்பவர்கள் முதலில் பதிலைக் கூறுங்கள். எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் இத்தகைய ஏமாற்றுப் பாதையில் பயணிப்பதற்கு ஒரு போதிலும் இணங்கப் போவதில்லை. அந்தவகையில், தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே விடிவை கொடுக்கக்கூடிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு, உரிய பொறுப்புக்கூறலுக்குரிய நேர்மையான பாதையில், தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ் தேசத்தினுடைய தனித்துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற ஒரு அரசியல் பாதையையும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் செய்யப்படுவதுதான் எங்களுக்கு உகந்தது. நாங்கள் அந்த அடிப்படையில்தான் செயல்படுவோம்.

மனித உரிமை பேரவையில் கோ குழுவின் சீரோ வரைபு வெளிவந்த பின்னணியில் அது சம்பந்தமாக ஒரு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில், பதில் கடிதம் எழுதப்பட வேண்டும் என்று மூன்று கட்சிகளையும், சிவில் சமூகத்தையும் இணைத்து முதலாவதாக எழுதப்பட்ட கடிதத்தின் பங்காளிகள் ஒரு முயற்சியை எடுத்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் இறுதியில் சிவில் சமூகம் தனியாகவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாகவும் இரண்டு கடிதங்களை வேறு வேறாக கோ குழு நாடுகளுக்கு அனுப்பியுள்ளீர்கள். அந்த முதலாவது கடிதத்திற்கு பங்காளிகளாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, விக்கினேஸ்வரனின் அணியோ இதில் பங்காளிகளாக ஏன் சேரவில்லை?

ஆம். நீங்கள் கூறுவது போல இந்த சீரோ முன்வரைபு வெளிவந்த உடனேயே அதில் இருக்கக்கூடிய கடும் ஏமாற்றுத்தன்மையை விளங்கிக்கொண்டு, அதற்கு ஒரு கட்டாய பதில் ஒன்றை நாங்கள் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த முயற்சியை எடுக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். சிவில் சமூகமும்; அவ்வாறான முயற்சியைத் தாங்களும் எடுக்கவேண்டும் என கருதியதாக தெரிவித்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் திரு.விக்னேஸ்வரனுடனும், எங்களுடனும் சேர்ந்து அந்த முதலாவது கடிதம் எழுதியதைப் போல, பதில் கடிதத்தை எழுதுவதாக எங்களுக்கு அறிவித்திருந்தார்கள். ஆனால், அறிவித்து ஒரு குறுகிய காலகட்டத்திற்குள்ளேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த சீரோ முன்வரைபை தாங்கள் நிராகரிக்கத் தயாரில்லை என்றும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வரைபாக கருதியபடியால் அவர்கள் அந்த முயற்சியில் ஒத்துழைக்க விரும்பவில்லை எனவும் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக  எமக்குச் சொல்லியிருந்தார்கள்.

அதற்குப் பின்னர் விக்னேஸ்வரன் அவர்களையும் எங்களையும் சேர்த்து ஒரு பொதுக்கடிதம் ஒன்றை எழுதுவதற்கு முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சி மிகப்பெரிய அளவிற்கு முன்னேறி இறுதிக்கட்டம் வரைக்கும் வந்து சேர்ந்தது. அதில் விசேடமாக பொறுப்புக்கூறல் சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து இந்த விடயம் எடுக்கப்பட்டால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு போக வேண்டும் போன்ற விடயங்கள் அதில் மிகத்தெளிவாக வலியுறுத்தப்பட்டது. முன்வரைபில் வரைபில் இருக்கக்கூடிய பொறுப்புக்கூறல் சமபந்தமாக இருந்த பலவீனங்கள், பிழைகளைச் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால் தீர்வென்ற விடயத்தில், அந்த வரைபிலும் 13ம் திருத்தம் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், சிவில் சமூகமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதை ஒரு ஆரம்பப்புள்ளியாகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாதென்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

ஆனால் விக்னேஸ்வரன் அவர்கள் அதை ஏற்பதற்கு மறுத்தார். அவரைப் பொறுத்தவரையில் இருக்கிறதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அரசாங்கம் அதை நீக்கக்கூடும் என்ற கருத்தை தெரிவித்தார். நாங்கள் குறிப்பிட்டதைப்போல அவரே இந்த 13ம் திருத்தம் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக அமையாது என ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.  இந்த 13ம் திருத்தமும், மாகாண சபை சட்டமும் ஒரு பில்லாக (டீடைட) இருந்த பொழுது, பாராளுமன்றுக்குக் கொண்டு வந்து நிறைவேற்றப்பட முதல், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் 27ம் திகதி ‘தயவு செய்து இதை நிறைவேற்ற விடாதீர்கள்’ என திரு. ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். இது நிறைவேற்றப்பட்டால் எங்கள் அரசியல்   ஒற்றையாட்சிக்குள் முடக்கப்படும் என்ற அபாயத்தைச் சுட்டிக்காட்டி இதைத் தடுப்பதற்கு முயற்சி செய்திருந்தனர்.

இவைகள் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டியே நாங்கள் 13ம் திருத்தத்தை ஆரம்பப்புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாதென சொல்லியிருந்தோம். நாங்கள் நேர்மையாக இருக்கப்போகிறோம் என்றால் இ;ந்த 13ம் திருத்தம் இருந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ அது எங்களுக்கு ஒன்றுதான். அது இருப்பதால் எங்களுக்கு எதுவித நன்மையும் கிடைக்கபோவது இல்லை. அதனைத் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் வரையில், சிறிலங்கா அரசும், இந்தியாவும் எங்கள் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கி வைத்திருப்பதற்கு, நாங்களே ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே இருக்கும். ஆகவே இது போனாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லையென்று என்றைக்கு நாங்கள் துணிகிறோமோ அன்றைக்குத் தான், இந்த தமிழ் அரசியல் இதைத் தாண்டிப் போகும். விடுதலைப்புலிகள்; இருந்த காலத்தில் தமிழ் அரசியல் அதைத் தாண்டிப் பயணித்ததற்கான காரணமும் இதுதான். ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய இந்த மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஒரு ஆரம்பப்புள்ளியாகக்கூட ஏற்கத்தயாராக இருக்கவில்லை. அதை நீக்கினாலும் தமக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது என்ற அளவுக்கு அவர்கள் ஒரு நிலைப்பாடு எடுத்ததால்த்தான் தமிழ் அரசியல் அவர்கள் இருந்தபோதும் அதைத்தாண்டியும் பேசப்படுகின்றது.

ஆகவே, இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியும் துரதிஸ்டவசமாக விக்னேஸ்வரன் அவர்கள் நாங்கள் சொன்ன கருத்துக்களுக்கு இணங்கவில்லை. அப்படியான ஒரு கட்டத்தில், தமிழ் சிவில் சமூகம் எங்களுடன் மட்டும் அடையாளப்படுத்த சங்கடப்பட்டனர்.. அதேவேளை, அந்த 13ம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் மட்டும் ஒரு தலைப்பட்சமாக நீக்குவதை சிவில் சமூகமும், விரும்பவில்லை. நாம் 13 ஆம் திருத்தத்தை ஏற்கவில்லை எனச் சொல்லுவதனால் சிவில் சமூகமும் நாங்களும் தனித்தனியாக கடிதங்களை எழுத வேண்டி வந்தது. எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த நிலைப்பாடு மிகச்சரியானது. மக்கள் இந்த விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற 13ம் திருத்தத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கத் தயாரில்லையென்றால் இதைத்தாண்டி தமிழ் அரசியல் ஒரு புள்ளிகூட நகராது.

ரொஷான் நாகலிங்கம்